கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர். அப்போது, கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்டத் தலைவர்களும் உடனிருந்தனர்.
அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று தொடங்கி, 'ஜப்பான்' திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10 ஆம் தேதி வரை இந்த உணவு வழங்குவது தொடரும் என்று கார்த்தி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கான சுவையான உணவினை பரிமாறவிருக்கிறார்கள்.