ராஜுமுருகன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் ஒரு பிரம்மாண்டமான பாடலைப் படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது. மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதை முடித்துவிட்டு 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த ஓடிடி தளங்கள், சாட்டிலைட் சேனல்கள், மியூசிக் லேபிள்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுவதாகத் திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.