ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக தரும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றம் சாட்டியது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் லட்டை பரிசோதனைக்கு உட்படுத்தி, லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார். இதையடுத்து லட்டு விவகாரம் அரசியலில் பெரிய பேசுபொருளாக மாற, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு மீது கற்களை வீசி பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த சூழலில் திருப்பதி லட்டு குறித்து கார்த்தி பேசியுள்ளார். இவரின் நடிப்பில் வருகிற 27ஆம் தேதி மெய்யழகன் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அந்நிகழ்ச்சியில் கார்த்தியிடம் தொகுப்பாளர், “லட்டு வேண்டுமா” என்று கேட்க அதற்கு அவர், “இங்க லட்டு குறித்து பேச கூடாது, சென்சிடிவ் டாப்பிக்” என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகரும் ஆந்திர பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், “சினிமா நிகழ்ச்சியில் லட்டை சென்சிடிங் டாப்பிக் என்று ஜோக்காக பேசுகின்றனர். இந்த மாதிரி பேசக்கூடாது. ஒரு நடிகராக அவர்மீது மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் சனாதன தர்மம் என்று வந்துவிட்டால் அதைப் பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோபமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் லட்டு குறித்து தான் பேசியதற்கு கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “பவன் கல்யாண் சார், எதிர்பாராத விதமாக தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டது. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை பின்பற்றி வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது.