இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாகவும், முக்கியக் கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க, பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக கமிட்டான நிலையில் பின்பு இளையராஜா கமிட்டானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா - இளையராஜா இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியானது. இதையடுத்து ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை நடந்து முடிந்த நிலையில் சீமான், கார்த்தி, சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அப்போது கார்த்தி பேசுகையில், "இது என்னுடைய நண்பனோட மேடை. நானும் மனோஜும் ஒன்றாக விளையாடினவங்க. அதுமட்டுமல்லாம நாங்க ரெண்டு பேரும் ஒரே வயசு. இயக்குநர் ஆகவேண்டும் தான் மனோஜுடைய ஆசை. ஆனால் பாரதிராஜா அங்கிள், நடிப்பு பக்கம் தள்ளி விட்டுட்டார். ஆனால் மனோஜ் முதல் படத்தில், நிறைய புது முகங்கள் அறிமுகப்படுத்துவது ரொம்ப பெரிய விஷயம். இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒரே படத்தில் இணைந்தது ரொம்ப சந்தோசம். ரெண்டு பேருமே எங்களுக்கு ஒரு முன்னோடி. அவர்களது உயரத்தை எட்டுவதற்கு தான் போராடிக் கொண்டு இருக்கிறோம்.
அவங்களுடைய நட்பையும் பார்த்திருக்கிறோம், சண்டையும் பார்த்திருக்கிறோம், இப்போது மீண்டும் இணைவதை பார்க்கிறோம். சீமான் அண்ணன் பேசுவதை கேட்க ஆசையா வந்தேன். ஆனால் படப்பிடிப்புக்கு உடனே போவதால் யூ-ட்யூபில் தான் கேட்க வேண்டும் போலிருக்கு. அவருடைய பேச்சுக்கு நான் ரசிகன்" என்றார்.