ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர், செய்தியாளர்களை சந்தித்து பேசினர் .
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கார்த்தி, மெட்ராஸ் படம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "நான் மெட்ராஸ்-ல வளர்ந்தவன். எனக்கு சாதி தெரியாது. மெட்ராஸ்ல் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது. நமக்கு பேர் மட்டும் தான் தெரியும். அதை தாண்டி எதுவுமே பார்த்தது கிடையாது. அந்த கதையில் எனக்கு பிடித்திருந்தது சுவர் தான். உலக சினிமா மாதிரி ஒரு சுவரை சுற்றி ஒரு அரசியல், இது மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதில் இருக்கிற கதாபாத்திரங்கள் மட்டும் தான் கண்ணில் பட்டது. அதை சாதி படமாக எப்போதுமே பார்த்ததில்லை. இப்போது வரைக்கும். எனக்கு அந்த படத்தில் சாதி இருப்பதாக தெரியவில்லை" என்றார்.
மேலும், "நான் சாதி பார்ப்பதில்லை. அது அவரவர் பார்வையில் இருக்கிறது. இப்போது ஸ்கூலில் எதுக்கு ஒரே மாதிரி யுனிஃபார்ம் கொடுக்கிறாங்க. வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதற்காக கொடுக்கிறாங்க. நான் அப்படி வளர்க்கப்பட்டவன். எனக்கு அந்த வித்தியாசம் தெரியாது" என்றார்.