Skip to main content

‘என்னைப் போல் இங்கு நிறைய தமிழர்கள் அவதியுறுகிறார்கள்’- கன்னட சினிமா குறித்து கதறும் ஃப்ரெண்ட்ஸ் பட நடிகை

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் கன்னட நடிகை விஜய்லக்‌ஷ்மி. இவர் தமிழ் பெண் என்றாலும், தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கன்னட சினிமாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு தாயாக நடித்திருந்தார்.
 

vijay lakshmi

 

 

இந்நிலையில், அவர் தற்போதையநிலை குறித்து ஒர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பது. “நான் நடிகை விஜயலட்சுமி ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பேன். பெங்களூருவில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன். ஆறு மாதங்களுக்கு  முன்பு கொஞ்சம் சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள்.
 

தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், பெங்களூரு வந்தேன். இங்கு வந்து இரண்டு படங்களில் நடித்தேன். அதற்குப் பிறகு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நிறைய வற்புறுத்தினார்கள். என் உடல்நிலையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டு, தொடர்ச்சியாக வாய்ப்புகள் தேடத் தொடங்கினேன்.
 

பலரும் உங்களுடைய பேச்சில் தமிழ் வருகிறது என்று தொடர்ச்சியாக கிண்டல் செய்து கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் என் உடல்நிலை மோசமானது. அங்குள்ள நடிகர்கள் சங்கத்துக்கு தகவல் தெரிவித்த போது, யாருமே பதிலளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மீடியாவுக்கு தெரியப்படுத்தினோம். அப்போது தான் நடிகர் சுதீப் சார் உதவி செய்தார். மேலும், உடல்நிலை மோசமானதால், வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன்.
 

ரவி பிரகாஷ் என்ற கன்னட நடிகர், எனக்கு உதவி செய்துவிட்டு என்னை ரொம்பவே டார்ச்சர் செய்தார். மேலும், வெளியேவும் என்னைப் பற்றி ரொம்பவே தவறான செய்திகளைப் பரப்பினார். எனக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மருத்துவமனையில் வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டார்கள். உடனடியாக, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், நடிகர்கள் சங்கத்திலும் என்னைப் பற்றி புகார் அளித்தார்.
 

இதற்கிடையே நானும் புகார் கொடுத்ததால், காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தத் தருணத்தில் எனக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மீண்டும் பணமின்றித் தவித்தேன். இப்போது வீடு கூட இல்லாமல் தவிக்கிறேன். பணரீதியாக யாருமே உதவி செய்ய முன்வரவில்லை. தொடர்ச்சியாக நீங்கள் தமிழர், தமிழர் என்று தான் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்னைப் போல் இங்கு நிறைய தமிழர்கள் அவதியுறுகிறார்கள். இங்கு நண்பர்கள் வீட்டில் தங்கிக் கொண்டிருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு என்னைக் கைது செய்யப்போகிறோம் என்றார்கள். அப்போது எனது வழக்கறிஞர் உதவியை நாடினேன்.
 

இந்த வீடியோவின் மூலம் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் ஒரு தமிழ்ப் பெண் என்பதால் இங்கு என்னைத் துன்புறுத்துகிறார்கள். புகார் அளித்தால், அதைக் கூட கன்னடத்தில் எழுதிக் கொண்டு வாருங்கள் என்கிறார்கள். இந்த ஊரில் மாட்டிக் கொண்டு நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். நான் ஒரு தமிழ்ப் பெண், மீண்டும் சென்னைக்கு வர விரும்புகிறேன்.
 

நான் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றால் கூட நேரம் வேண்டும். படப்பிடிப்புக்குப் போகக் கூட இப்போது என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் யாருமே, எனக்கு உதவி செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு என்ன பண்ணுவது எனத் தெரியாமல், குடும்பத்தை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
 

மறுபடியும் எனக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பு தமிழ் மக்களின் கவனத்துக்கும், தமிழ்த் திரையுலகினரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். இங்கு தமிழ்ப் பெண் என்பதால் நடிகர்கள் சங்கம், காவல்துறையினர் என அனைவருமே துன்புறுத்துகிறார்கள். எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள்”. இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்