இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (07.11.2022) தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது கமல்ஹாசன் கூறுகையில், "உலக நாயகன் எனும் பட்டம் ஒரு நடிகனுக்கு முக்கியம். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தப் பட்டத்தை சொல்லித்தான் அடையாளம் காண்கிறார்கள். ஏன் இப்பலாம் இந்தி படத்தில் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். அப்படி இருக்கிற நான் இந்தி ஒழிக என்று சொல்லமாட்டேன். சிறு வயதில் சொல்லியிருக்கேன். அப்போது எனக்குத் தெரியாது. நான் சொல்ல விரும்புவது தமிழ் வாழ்க. நீடூடி வாழ்க. என்பதுதான்.
தமிழ் மெல்லச் சாகாது. என்னுடைய பேரன் பேத்தி இருக்கும் வரையில் அதனை நோக்கிக்கூட போகாது. நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லும்போது தமிழுக்கும் வாழ்த்து சொல்லுங்கள். அதே நேரம் பிற மொழியும் கத்துக்கோங்க. அப்படி கத்துக்கிட்டால்தான், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று சொல்வதற்கானத் தகுதி உங்களுக்கு வரும். இங்கு நாம் கூடியிருப்பது உங்களைத் திருத்துவதற்காகத்தான். ஆளுநரைத் திருத்தவோ மத்திய அரசைத் திருத்தவோ இன்னும் நேரம் ஆகும். ஆனால் உங்களுக்குச் சொன்னால் புரியும்.
எனக்குப் பெரியார் பாதிப்பு உண்டு; ராமானுஜரின் பாதிப்பும் உண்டு. இரண்டு பேரின் வேலைகளும் ஒன்றாக இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். அதோடு காந்தியார் பாதிப்பும் உண்டு. அவரும் அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறார். மூவரும் ஒரே இலக்கை நோக்கித்தான் வழி தேடிக்கொண்டிருப்பார்கள். அதை எல்லாம் செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் நமக்குள் ஜாதி பேசுவதை, ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதை நிறுத்த வேண்டும். நீ நல்லவனாக இருந்தால் நீ யோக்கியன். நீ நேர்மையாக இருந்தால் நீ யோக்கியன். அவ்வளவுதான். ஜாதி என்று பிரித்தால் நல்லவன் கெட்டவன் என்று பிரிக்கிறோம். ஆண், பெண் என்று பிரிக்கிறோம். அதுவும் நான்காகிவிட்டதே என மறுபடியும் நான்கு வர்ணத்திற்குள் வரவேண்டாம். நாம் எல்லாம் அதனைக் கடந்து வந்துவிட்டோம். இன்றைக்குப் பல சடங்குகளை நாம் தவிர்த்துவிட்டோம். இந்த ஒரு சடங்கையும் தவிர்த்துவிட்டால் நல்லது.
மூளை இல்லாதவனை சில பேர் கிண்டல் செய்வார்கள். அவர்களுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லை என்பதே பல காலமாக நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் மனிதனை அடித்துச் சாப்பிடும் அந்தப் பழக்கம் நமது மூளையில் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறது. அது நமக்குள் வேண்டாம்" எனப் பேசினார்.