பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்(77) 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று(18.8.2022) நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், திரைபிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நெல்லை கண்ணன் மறைவுக்கு இறங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.