ரஜினியின் 'காலா' படம் உலகெமெங்கும் ஜூன் 7ஆம் தேதி (நேற்று) வெளியானது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது. விநியோகஸ்தர்கள் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க வலியுறுத்தியதால் 'காலா' படத்தை இந்த இரண்டு திரையரங்க உரிமையாளர்கள் புறக்கணித்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் 'வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை' என்று கமலா திரையரங்கு தரப்பில் விளக்கம் அளித்தனர். சொன்னது போலவே இந்த இரண்டு திரையரங்குகளிலும் படம் வெளியாகவில்லை.
தற்போதுள்ள சூழலில் மல்டிப்ளெக்ஸ்கள், மால்கள் அனைத்திலும் இணையத்தில் முன்பதிவு செய்து பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். சென்னையில் இணையமெல்லாம் பயன்படுத்தாத எளிய மக்கள் முன்பதிவெல்லாம் செய்யாது வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்க்கக் கூடிய அரங்குகளாக வெகு சில அரங்குகளே இருக்கின்றன. அதில் உதயம், கமலா அரங்குகள் அடக்கம். 'காலா' வெளியாகாததால் கமலா மற்றும் உதயம் திரையரங்குகளில் எப்போதும் படம் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.