விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த உள்ளிட்ட சில நிர்வாகிகள், நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இதனிடையே கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தொலைபேசி வாயிலாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அக்கட்சியின் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டு, தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், “வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், வரும் 2026 - தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்” என்றார்.