எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்களின் திரைவாழ்வில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. அவர்களுக்குப் பின் ரஜினி, கமல் இருவருமே கலைஞருக்கு நெருங்கிய நண்பர்களாக, மரியாதைக்குரிய தம்பிகளாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இதுபோல சமகால முன்னணி ஸ்டார்களான அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர்களுடனும் கலைஞர் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அவர்களது வாழ்விலும் இவரது உறவு சொல்லிக்கொள்ளும்படியாகவே இருந்து வந்துள்ளது. அதை சற்று ரீவைண்ட் செய்து பார்த்தால்...
அஜித் ஒரு தும்பைமலர்
கலைஞருக்கும் அஜித்திற்குமான உறவு கிட்டத்தட்ட அஜித்தின் திருமணத்தில் ஆரம்பித்தது. இவரது திருமண வரவேற்பில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். கலைஞரும் நேரில் சென்று அஜித்தை வாழ்த்தினார். பின்னர் அஜித் திரையுலகில் வளர்ந்தபோது ஓரிரு முறை ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அஜித்குமார் சந்தித்தார்.
திரைக்கலைஞர்களுக்கு நிலம் ஒதுக்கிய கலைஞரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித்குமார் மேடையில் பேசியபோது... '60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று பேசினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அஜித் இப்படி பேசியதற்கு ஒரு சேர எதிர்ப்புகளும், ஆதரவும் கிளம்பின. ஒரு முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் இப்படி பேசியதற்கு, 'அஜித் ஜெயலலிதா விசுவாசி' என்றும், அவர் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்ற அளவுக்கு பேசிக்கொண்டனர்.
பின்னர் இந்த கடும் கொந்தளிப்பிற்கு மத்தியில் பிரச்சனை குறித்து விளக்கமளிக்க ரஜினிகாந்தும், அஜித்குமாரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்... 'எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலைஞர் பெருந்தகை அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் எனினும் எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர். இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி அஜித் விளக்கமளித்தார், கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்த அஜித் ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.
விஜய்
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பத்தில் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை, ஜாதிக்கு ஒரு நீதி போன்ற படங்களில் பொதிந்திருந்த திராவிட உணர்வு கலைஞருக்கு அவரை அறிமுகம் செய்தது, பின்னாளில் நெருக்கமாக்கியது. அந்த உறவு விஜய்க்கும் இயல்பாக தொடர்ந்தது. விஜய் முன்னணி நடிகராக வளர்ந்த பின் நடித்த 'குருவி' படத்தை கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். சன் பிக்சர்ஸ்ஸிலும் படங்கள் நடித்தார் விஜய். இப்படி கலைஞர் குடும்பத்துடன் உறவு தொடர்ந்தது. அது, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்ட விழாவில் விஜய் பங்குபெற தயாநிதி மாறன் மூலமாக ஏற்பாடாகும் அளவுக்கு வலுவாகவே இருந்தது.
அந்த சமயத்தில் தான் கலந்துகொண்ட விழாக்களில் எல்லாம் கலைஞரை புகழ்ந்து பேசினார். திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஒரு குடியிருப்பைக் கட்டி, அங்கு கலைஞருக்கு ஒரு சிலை வைக்க வேண்டுமென்று தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன் பின்னர் கலைஞர் குடும்பத்து தயாரிப்பு நிறுவனங்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட, மெல்ல விலகிய விஜய், அடுத்து வந்த தேர்தலில் தனது தந்தையுடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவுடனும் கூட விஜயின் உறவு சுமூகமாக இருக்கவில்லை. கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அங்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் விஜய். படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் இன்று அவரால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தமுடியவில்லை. அவரது தந்தை, மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.