தி.மு.க.வின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகக் கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி, திரைத்துறை சார்பில் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி எனப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிடத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது. அதைப் பரிசீலித்த மத்திய நிதி அமைச்சகம் கடந்த ஜூலை 13-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கலைஞரின் நினைவு நாணயத்தின் ஒரு புறம் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 - 2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது.மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி மாலை 6.50 மணியளவில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, நாணயத்தை வெளியிடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை ஆற்றுகிறார். இந்த நிலையில் இவ்விழாவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.