Skip to main content

மருதமலை முருகன் சிலையை உடைக்க கம்புடன் கிளம்பிய தேவர்... கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்! 

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்பத்தேவரின் கொடை வள்ளல் பண்பு குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

"சாண்டோ சின்னப்பத்தேவருக்கு எல்லா பத்திரிகையும் படிக்கும் பழக்கம் இருந்தது. படக்கம்பெனி பக்கத்திலேயேதான் அவர் வீடு இருக்கும். மொத்தம் நான்கு கிரவுண்ட் அளவுள்ள வீடு. அதில் ஒரு கிரவுண்ட், மைதானம் மாதிரி இருக்கும். தேவருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் தினமும் காலையில் எழுந்து அந்த மைதானத்தில்தான் நடப்பார். பின் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளிப்பார். குளித்துவிட்டு நேராக பூஜை அறைக்குச் சென்று முருகன் படத்திற்கு முன்பாக நின்று முருகனைத் திட்டுவார். நாமெல்லாம் எனக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டும்... நல்ல வாழ்க்கை வேண்டும் என்றுதான் கடவுளிடம் வேண்டுவோம். அவர் ‘டேய் அயோக்கியப்பயலே... நீயெல்லாம் தெய்வமாடா...’ என்றுதான் ஆரம்பிப்பார். எந்த வசதியும் இல்லாமல் இருந்த ஆரம்பக் காலகட்டத்திலும் முருகனை இப்படித்தான் திட்டுவார். பின்னாட்களில் சினிமா தயாரிப்பாளராகி மிகப்பெரிய கோடீஸ்வரனாகிவிட்டபோதிலும் அவர் பழக்கம் மாறவில்லை.

 

தேவர் கோயம்புத்தூரில் இருந்த காலத்தில் கடையில் இரண்டு இட்லிகள் வாங்கினால், பத்துமுறை சாம்பார் வாங்குவார். அவரிடம் இட்லி வாங்க அதற்கு மேல் பணம் இல்லாததால், சாம்பாரைக் குடித்தே வயிற்றை நிரப்புவார். தேவரே இதுக்குமேல சாம்பார் ஊத்த முடியாது... நிறுத்திக்கோரும் என ஓட்டல்காரர்கள் சொல்லியதெல்லாம்கூட நடந்திருக்கிறது. அப்படி ஒருநாள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். தேவர் அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் திரும்பிக்கொடுக்காததால், அவர் வேட்டியை கழுத்தில் போட்டார். கழுத்தில் வேட்டி போடுவதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். அந்த இடத்தில் ஜனமெல்லாம் கூடிவிட்டது. இரண்டு நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடுவதாக தேவர் சொன்னதும் கழுத்தில் போட்ட வேட்டியை அவர் எடுத்தார். 

 

sando chinnappa devar

 

வாக்கு கொடுத்தபடி இரண்டு நாட்களில் பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர், கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு மருதமலைக்குக் கிளம்பினார். ‘ஒருத்தன் சாம்பார் ஊத்தமாட்டேங்கிறான்; இன்னொருத்தன் கழுத்தில் வேட்டியைப் போடுகிறான். உன்னையே நம்பியிருக்க எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையாடா... நீயெல்லாம் கடவுளாடா’ என முரட்டுத்தனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு முருகன் சிலையை உடைக்க மருதமலை படிக்கட்டில் ஏறுகிறார். அந்தக் காலத்தில் மருதமலை மிகவும் சிறிய கோவிலாகத்தான் இருந்தது. கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே படியேறுகையில், சிகரெட் பிடித்துவிட்டு யாரோ தூக்கி எறிந்த ஒரு சிகரெட் பெட்டி ஓர் ஓரத்தில் கிடக்கிறது. அதில் ஏதோ இருப்பதுபோல தெரிந்ததும், தேவர் கையில் எடுத்துப் பார்க்கிறார். அதில் பத்து ரூபாய் நோட்டு இருந்துள்ளது. அந்தப் பத்து ரூபாய் கிடைத்ததும் கோவிலிலேயே தேவர் கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு, கோயம்புத்தூர் திரும்பிவந்து அந்தக் கடனை தேவர் அடைத்தார். 

 

சினிமாவில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து பின்னாட்களில் பெரிய கோடீஸ்வரனாகிவிட்டார். தேவருக்கு சர்க்கரை வியாதி வந்தவுடன் உணவுப் பழக்கத்தில் கண்டிப்போடு இருக்கும்படி டாக்டர்கள் தேவரை அறிவுறுத்தினர். இதையும், 'சாப்பிடணும்னு நினைக்கையில் கையில் பணம் கொடுக்கல... பணம் கொடுத்திருக்கையில் சாப்பிடவிட மாட்டுக்க' என முருகனிடம் கோபத்தோடு முறையிடுவார். தினமும் இதுபோல பூஜையை முடித்துவிட்டு, அதன்பின்னரே காலை உணவு சாப்பிடுவார். சாப்பிட்டுவிட்டு எல்லா பத்திரிகை, நாளிதழ்களையும் எடுத்து வாசிப்பார். 

 

அன்று ஒருநாள் அவரிடம், ‘அண்ணே குமுதம் படிச்சீங்களா’ எனக் கேட்டேன். ‘படித்தேன்’ என்றார். அதில், ஒரு பையனுக்கு மருத்துவ உதவி கேட்டு விளம்பரம் வந்திருந்தது. ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பையன் சிகிச்சைக்கு அது பெரிய அளவில் கைகொடுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அந்த விளம்பரத்தைக் கவனித்தீர்களா’ என்றேன். ‘கவனித்தேன்... அதற்கு என்ன’ என்றார். ‘அந்தப் பையனுக்கு உண்மையிலேயே நகமெல்லாம் நீல வண்ணத்தில்தான் இருக்கிறது. வெளியே படிக்கட்டிற்கு அருகில்தான் நிற்கிறான்’ என்றேன். ‘அவனை உள்ளே கூப்பிடு’ என்றார். நான் அவனை உள்ளே அழைத்து வந்ததும் தேவரிடம் வந்து நீல வண்ணத்தில் இருக்கும் தன் நகங்களைக் காட்டினான். தேவர் அதிர்ந்துவிட்டார். ‘ஒரு ரூபாய் ஒரு ரூபாய்யா வசூலித்து நீ சிகிச்சைக்குப் போக முடியுமா’ என அவனிடம் தேவர் கேட்க, அருகில் இருந்த நான் ‘நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து உதவுங்கள் அண்ணே’ என்றேன். கொஞ்ச நேரம் யோசித்த தேவர், ‘சரி சிகிச்சைக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்’ எனக் கேட்டார். அந்தப் பையன் பத்தாயிரம்வரை பணம் செலவாகும் என்றான். மேலே இருந்த அறைக்கு ஃபோன் செய்த தேவர், பத்தாயிரம் பணம் கொண்டுவரச் சொன்னார். ‘ஒவ்வொரு ரூபாயா வாங்கி நீ என்னைக்கு சிகிச்சை எடுக்க? இந்தப் பத்தாயிரத்தை வச்சு வைத்தியம் பாரு’ எனக் கூறி, பணத்தை அந்தப் பையன் கையில் கொடுத்தார். அன்றைய காலத்தில் பத்தாயிரம் என்பது மிகப்பெரிய தொகை. பின்பு அந்தப் பையன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமடைந்தான். ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் எனக் குமுதத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அந்தப் பையனை நான் அவரிடம் கொண்டுவந்து நிறுத்த, ஒத்த ரூபாயென்ன... மொத்த ரூபாயும் நானே தாரேன் என்று கொடுத்த மனசு எத்தனை பேருக்கு வரும். தேவரின் வள்ளல் குணத்திற்கு இதுவும் ஒரு மிகப்பெரிய சான்று".

 

 

சார்ந்த செய்திகள்