தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு நடந்த அதிசயம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சாண்டோ சின்னப்பத்தேவர் நேரில் வந்து சந்தித்தது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். மருத்துவமனைக்கு கையில் பெரிய பண்டலுடன் வந்திருந்த தேவர், மிகப்பெரிய தொகையை கொடுத்து எம்.ஜி.ஆரை அடுத்த படத்திற்காக புக் செய்தார். குண்டடிபட்டிருந்த எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பேச்சுவருமா என்பதே சந்தேகமாக இருந்தது. இருப்பினும், எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பு காரணமாக அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தார் தேவர். அட்வான்ஸ் கொடுத்த கையோடு மருதமலைக்கு சென்று எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டும் என்றும் தேவர் வேண்டினார். தேவரின் வேண்டுதலினால் ஒரு மிகப்பெரிய அதிசயம் நடந்ததாகவும் அந்த அதிசயம் பற்றி அடுத்த பகுதில் கூறுகிறேன் என்றும் கூறியிருந்தேனல்லவா? அதைப் பற்றி உங்களுக்கு தற்போது கூறுகிறேன்.
மருதமலைக்குச் சென்ற தேவர், முருகன் சிலைக்கு முன்பு அமர்ந்தார். அடேய் முருகா...நான் சொல்வதை கவனமாக கேள், நீ இருட்டுக்குள் இருந்தபோது அவன்தான் உனக்கு விளக்கு போட்டு வெளிச்சத்தைக் கொடுத்தான். இப்ப அவன் வீட்டில் இருட்டடைந்து வாழ்வா சாவா என்ற நிலையில் உட்கார்ந்திருக்கான், உன் கோவிலில் இருக்கும் வெளிச்சத்தைபோல எம்.ஜி.ஆர். வீட்டிலும் வெளிச்சத்தைக் கொடு, எம்.ஜி.ஆரை நீ மட்டும் பேச வைக்கவில்லை என்றால் உன் கோவிலில் வந்து குண்டு போட்டுவிடுவேன் என்றார். எப்போதுமே முருகனிடம் உரிமையோடு வேண்டுவார் தேவர். சில நேரங்களில் முருகன் முன்பு அமர்ந்து அழுவார், சில நேரங்களில் சிரித்துப் பேசுவார், சில நேரங்களில் மணிக்கணக்காக திட்டுவார். அதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு சிரிப்பாக இருக்கும். ஒரு வாரத்திற்குள் அவன் பேசவில்லை என்றால் நிச்சயம் உன் கோவிலில் குண்டு போடுவேன் என்று கூறிவிட்டு கிளம்பி வந்துவிடுகிறார்.
15 நாட்கள் கடந்திருக்கும். எம்.ஜி.ஆருக்கு தும்மல் வந்துள்ளது. அவர் தொடர்ந்து தும்மிக்கொண்டு இருக்கையில் குண்டு வெளியே வந்துவிட்டது. இந்த விஷயத்தை தேவர் என்னிடம் சொல்லியபோது ஆச்சரியமாக இருந்தது. பின், குணமடைந்த எம்.ஜி.ஆர், மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில எழுத்துகளை மட்டும் அவரால் கடைசிவரை சரியாக உச்சரிக்க முடியவில்லை. அதனால் சில நேரங்களில் அவர் பேச்சு மழலைச் சொல் மாதிரி இருக்கும். இது பெண்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி, அதன் மூலமே எம்.ஜி.ஆரின் மார்க்கெட் பல மடங்கு பெரிதாகிவிட்டது.