தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்ப தேவரிடம் தன்னுடைய இளமைக்கால சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர். பகிர்ந்து கொண்டது எனக் கலைஞானம் கூறியவை பின்வருமாறு...
சாண்டோ சின்னப்ப தேவரும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள் ஆனதில் மாருதி ஜிம்மிற்கு பெரிய பங்கு உள்ளது. அந்த ஜிம்மில் அவர்களுக்கு இடையேயான நட்பு எப்படி உருவானது என முன்னரே கூறியிருக்கிறேன். ஒரு முறை கோயம்புத்தூர் மாருதி ஜிம்ல தேவரும் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. தேவர் சட்டை ஏதும் போடாம உடற்பயிற்சி பண்ணிக்கிட்டு இருந்தார். அப்ப திடீர்னு ஒரு கழுத்து செயின் வந்து தேவர் மேல விழுந்தது. தேவர் சுத்தி சுத்தி பார்த்தார். ஒரு பொண்ணு அவரைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே போகுது. அந்தப் பொண்ணு யாருன்னா, பத்து வீடு தள்ளி ஒரு வீட்டுல குடி இருக்கிற பொண்ணு. அதுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தை வேற இருந்தது. தேவருக்கு ஒரே குழப்பம். ஆசை இல்லாமலா இப்படி பண்ணும்... கல்யாணமான பொண்ணா வேற இருக்கே... இது தப்பாச்சே என யோசிச்சுகிட்டே பக்கத்துல இருந்த ஒரு பார்க்-ல போய் உட்காருகிறார். அங்கே எம்.ஜி.ஆர். வருகிறார். அங்கு அமர்ந்திருப்பது குறித்து தேவரிடம் கேட்கையில், அவர் நடந்த விஷயங்களை விளக்கிக் கூறுகிறார். உடனே எம்.ஜி.ஆர் வாய்விட்டுச் சிரித்தார்.
பின் தேவரிடம், அண்ணா இதை விடுங்க. நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன்னு சொல்லி அவர் வாழ்க்கைல நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். அந்தச் சம்பவம் என்னனா... எம்.ஜி.ஆரும் அவர் அண்ணனும் கும்பகோணம் நாடகக் கம்பெனில நடிச்சிக்கிட்டு இருந்தாங்க. அப்போது எம்.ஜி.ஆருக்கு 16 வயசு. அவங்க இரண்டு பேர், அவங்க அம்மா என மூன்று பேரும் தனியா வீடெடுத்துத் தங்கியிருந்தாங்க. அங்க எதிர்வீட்டில் 14 வயசுல ஒரு பொண்ணு இருந்தது. அந்தப் பொண்ணு எம்.ஜி.ஆரை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கும். நம்ம நாடகத்தைப் பார்த்துட்டு சிரிக்குதுன்னு நினைத்து அவரும் முதல்ல சிரிச்சிருக்கிறார். அந்தப் பொண்ணு தொடர்ந்து சிரிச்சுக்கிட்டே இருந்தது. உடனே இவருக்கும் அந்தப் பொண்ணுகிட்ட பேசணும்னு ஆசை வந்துள்ளது. ஆனால், எப்படிப் பேசணும்னு தெரியல. அவங்க வீட்டுல பெரிய குடும்பம். நேரடியா போய் பேச முடியாது. இங்க, எம்.ஜி.ஆர் வீட்டுல அம்மா இருக்காங்க. இப்படி செய்றது அவங்களுக்கு தெரிஞ்சதுன்னா நம்மளை கொன்னு போட்டுருவாங்களேனு எம்.ஜி.ஆர்-க்கு பயம். உடனே ஒரு திட்டம் போட்ட எம்.ஜி.ஆர். கயிற்றுக் கட்டிலை எடுத்திகிட்டுப்போய் வெளிய படுத்துக்கிட்டார். அந்தப் பொண்ணு சாப்பிட்ட இலையை எடுத்துக்கிட்டு அந்த வழியாதான் வரணும். அந்தப் பொண்ணு அப்படி வரும் போதும் சிரிச்சுக்கிட்டே போனது. கேட்கணும்னு ஆசை இருந்தாலும் மனசுல தைரியம் இல்லாததால எம்.ஜி.ஆர். கேட்கல. ஒரு நாள் கேட்டே ஆகணும்னு முடிவெடுத்து வெளிய அப்படியே கட்டில்ல படுத்திருக்கிறார். அப்போ அந்தப் பொண்ணு போகையில கையைப் பிடித்துவிடுகிறார். அந்தப் பொண்ணு கையை உதறிவிட்டு சிரிச்சுக்கிட்டே வேகமா வீட்டுக்குள்ள போயிருச்சு. அன்னைக்கே விடிய விடிய தூக்கம் வராம எம்.ஜி.ஆர் உள்ளுக்குள்ள பயந்துகிட்டே இருந்திருக்கிறார்.
மறுநாள் அந்தப் பொண்ணு வீட்டு வாசல்ல ஒரே கூட்டமா இருந்திருக்கு. எம்.ஜி.ஆர் உடனே அவர் அம்மாகிட்ட போய்க் கேட்டிருக்காரு. அந்தப் பொண்ணு வயசுக்கு வந்துருச்சுடானு சொன்ன அவர் அம்மா, பிறகு எல்லாத்தையும் விளக்கமாச் சொல்லியிருக்காங்க. எம்.ஜி.ஆர் மனசு கொஞ்சம் அமைதியாகிருச்சு.
அன்னைக்கு எல்லாச் சம்பிரதாயமும் நடந்து முடியுது. எம்.ஜி.ஆர் அவங்க வீட்டு வாசல்ல உட்காந்திருக்கிறார். அந்த வீட்டுல இருந்து கிளம்புன ஒரு மூதாட்டி, அந்தப் பொண்ணோட அம்மாவிடம் இனிமேதான் நாம உஷாரா இருக்கணும். பொண்ணு வயசுக்கு வந்துருச்சுல எவனாவது கண்ணு வச்சுருவான். பின்ன பொண்ணோட வாழ்க்கை அம்போன்னு ஆகிரும் எனச் சொல்லியுள்ளது.
பின் தன்னோட அம்மாகிட்ட போய் நடந்த எல்லாத்தையும் எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா அதைக் கேட்டு விட்டு, "ஐயோ இதெல்லாம் தப்புடா" என்றார். ஏற்கனவே இவர்கள் நாடகத்திற்காகத்தான் இந்த ஊரில் வந்து தங்கியுள்ளனர். அந்தப் பொண்ணோட குடும்பம் ஊரில் பெரிய தலைக்கட்டு. எதற்குத் தேவையில்லாத பிரச்சனைகள்னு நினைத்து எம்.ஜி.ஆரும் அவர் அம்மாவும் அந்த வீட்ட காலி பண்ணிட்டு வேற பக்கம் போய்ட்டாங்க. அதன் பிறகுதான், எம்.ஜி.ஆர்-க்கு நிம்மதியே வந்தது.