தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதின் இரண்டாம் பகுதி பின்வருமாறு...
ஒரு குடிலில் வசித்துவரும் சாதாரண மகரிஷி சுக்ராச்சார்யாரின் மகள் தேவயானி, அரசரின் மகள் சர்மிஷ்ட்டையை தன்னுடைய பணிப்பெண்ணாக அழைத்துச் சென்றது குறித்து கடந்த பகுதியில் விரிவாக கூறியிருந்தேன். யயாதியின் நாட்டில் தேவயானிக்கு பணிப்பெண்ணாக இருந்து வேலை செய்துவருகிறாள் சர்மிஷ்ட்டை. அவளை இந்த வேலையைச் செய், அந்த வேலையைச் செய் என மோசமாக நடத்துகிறாள் தேவயானி. அன்று யயாதி மன்னனுக்கு பிறந்தநாள். அதற்கான விழாவில் அனைவருக்கும் வாரிவாரி உதவிகள் செய்துகொண்டிருந்தான். அன்று யயாதி மன்னனை பார்த்த சர்மிஷ்ட்டைக்கு அவன் மீது ஆசை ஏற்படுகிறது. யயாதி மன்னன் பேரழகன். நந்தவனத்தில் அமர்ந்து அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கிறாள்.
அந்த விழா முடிந்ததும் நந்தவனம் வழியாக வந்த யயாதியைப் பார்த்து சர்மிஷ்ட்டை வணக்கம் வைக்கிறாள். அவனும் பதிலுக்கு வணக்கம் வைக்கிறான். அனைவருக்கும் கேட்டதை கொடுத்தீர்கள். நான் ஒன்று கேட்டால் கொடுப்பீர்களா என்கிறாள் சர்மிஷ்ட்டை. அவன் தாராளமாக கேளு எனக் கூற, நான் உங்களுடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறாள். அன்றிலிருந்து யயாதி தினமும் இரவு தேவயானிக்கு தெரியாமல் சர்மிஷ்ட்டையை சந்திக்கிறான். அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டே இருக்க, சர்மிஷ்ட்டைக்கு மூன்று குழந்தைகள் பிறந்துவிடுகின்றன. யயாதி மன்னனுக்கு ஏற்கனவே தேவயானி மூலம் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒருகட்டத்தில் இந்த விஷயம் தேவயானிக்கு தெரியவர, தன்னுடைய தந்தைக்கு சேதி அனுப்பிவிடுகிறாள். அவர் கிளம்பிவந்து மகளிடம் முழுமையாக விசாரிக்கிறார்.
மகள் விளக்கிச் சொன்னதும் யயாதியை அழைக்கிறான். ஏதாவது சாபம் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே அவர் வந்து நிற்க, கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொருத்தி மேல் ஆசைப்பட்டு அவளுக்கு மூன்று குழந்தைகளை கொடுத்ததால் உனக்கு முதுமை சாபம் அளிக்கிறேன் என சாபம் இடுகிறார். உடனே யயாதி மன்னன் முதுமையடைந்து உடல் குறுகி குள்ளமாகிவிடுகிறான். மகரிஷி, என்னதான் இருந்தாலும் நான் இந்த நாட்டின் மன்னன். எனக்கு இப்படி ஒரு கேவலமான சாபம் கொடுத்துவிட்டீர்களே. நான் உங்கள் மருமகன். இது வெளியே தெரிந்தால் இந்த நாடு உங்களையும் தவறாக நினைக்குமே. நான் செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறான். உடனே, மகரிஷி மொத்தம் உனக்குள்ள 5 குழந்தைகளில் யாரிடமாவது இந்த முதுமையை கொடுத்துவிட்டு அவனுடைய இளமையை நீ வாங்கிக்கொள். நீ ஆண்டு அனுபவித்து வாழ்ந்த பிறகு அந்த இளமையை வாங்கியவனிடமே கொடுத்துவிட்டு உன் முதுமையை வாங்கிக்கொள் என்கிறார்.
தேவயானிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளிடமும் சென்று அவர்கள் இளமையை கேட்கிறான் யயாதி. அவர்கள் இருவரும் மறுத்துவிடுகின்றனர். பின், சர்மிஷ்ட்டைக்கு பிறந்த மூன்று குழந்தைகளிடம் சென்று கேட்கிறார். முதல் இரண்டு குழந்தைகளும் மறுத்துவிட, மூன்றாவது மகன் புரு சம்மதிக்கிறான். அவரது இளமை யயாதிக்கு மாறுகிறது. யயாதியின் முதுமை புருவுக்கு மாறுகிறது.
அந்த இளமையோடே சர்மிஷ்ட்டையிடம் செல்கிறான் யயாதி. உன்னுடைய உடம்பில் இருப்பது என் மகன். உன்னுடன் எப்படி நான் உறவாட முடியும் எனக் கூறி அவனைத் தொட அனுமதிக்க மறுத்துவிட்டாள். மன்னனுக்கு வேறு பெண்ணே கிடைக்காதா என்ன? பிற பெண்களுடன் ஆண்டு அனுபவித்து, ஒருகட்டத்தில் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். ஆயிரம் ஆண்டுகள் அந்த இளமையுடன் வாழ்ந்தான் யயாதி. பின், புருவிடமே அந்த இளமையை ஒப்படைத்துவிட்டு யயாதி தவத்திற்கு சென்றுவிடுகிறான்.
தவத்திற்கு போகும்முன், என்னுடைய பரம்பரையை ஆண்டு விருத்தி செய்ய இந்த நாட்டிற்கு மன்னனாக உன்னை நியமிக்கிறேன் என புருவை நியமித்துவிட்டு சென்றார். கட்டிய மனைவிக்கு இரண்டு மகன்கள் இருந்தபோதிலும் தனக்காக தன் இளமையை தியாகம் செய்த புருவிடம் தன்னுடைய அதிகாரத்தை ஒப்படைத்தான் யயாதி. இதுதான் மகாபாரதத்திற்கே வித்து.