தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
மகாபாரதத்தில் ஒரு காதல் கதை வரும். மகாபாரதம் ஆரம்பிப்பதற்கு இருவர்தான் ஆணி வேர். ஒருவர் சர்மிஷ்ட்டை. மற்றொருவர் தேவயானி. ஒரு அசுரனின் மகள்தான் சர்மிஷ்ட்டை. தேவயானி சுக்ராச்சார்யாரின் மகள். சுக்ராச்சார்யார் பெரிய மகரிஷி. அவரைப் பார்த்தால் தேவலோகம் பயப்படும். அங்குள்ள அசுரர்களுக்கு அவர்தான் குரு. சர்மிஷ்ட்டையும் தேவயானியும் நண்பர்கள். சுக்ராச்சார்யாருக்கு உயிரோடு இருப்பவர்களை சாகடிக்கவும் தெரியும். இறந்தவர்களை உயிரோடு எழுப்பவும் தெரியும். சர்மிஷ்ட்டை, தேவயானி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் உடுத்தியிருந்த துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு வேறு துணியை கட்டிக்கொண்டு ஆற்றில் குளிக்க இறங்குகிறார்கள். அனைவரும் சிரித்து பேசி குளித்துக்கொண்டு இருக்கையில் பெரிய காற்றடித்து தனித்தனியாக கழற்றி வைத்திருந்த துணிகள் ஒரே இடத்தில் குவிந்துவிடுகின்றன.
காற்றில் துணி பறக்கிறது என்று அனைவரும் நீரை விட்டு எழுந்துவருகின்றனர். அதில் சர்மிஷ்ட்டை தேவயானியின் துணியை எடுத்து உடுத்திவிடுகிறாள். தேவயானிக்கு கடும் கோபம். எப்படி என்னுடைய உடையை எடுத்து நீ உடுத்தலாம் என்று சர்மிஷ்ட்டையை கடுமையாக திட்டுகிறாள். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் உச்சத்தை அடைகிறது. ஒரு கட்டத்தில் கடுப்பான சர்மிஷ்ட்டை, நான் அசுரனின் மகள். என்னதான் இருந்தாலும் நான் கொடுக்கிற குடும்பத்தில் பிறந்தவள். நீ கையேந்துற குடும்பத்தில் பிறந்தவள்தானே என்று தேவயானியை பார்த்து தடித்த வார்த்தையை கூறிவிடுகிறாள். பின், சுக்ராச்சார்யார் மகள் தேவயானியை அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிடுகிறாள். இந்த சம்பவம் இல்லையென்றால் மகாபாரதமே இல்லை. ராஜகுமாரியான சர்மிஷ்ட்டை அங்கிருந்து கிளம்பிவிடுகிறாள். கிணற்றுக்குள் விழுந்த தேவயானி உதவிகேட்டு உள்ளிருந்து கத்துகிறாள்.
அந்த நேரத்தில் பக்கத்து தேச மன்னன் யயாதி வேட்டைக்கு வருகிறான். உதவி கேட்டு கிணற்றுக்குள் இருந்து குரல் கேட்டதையடுத்து, கிணற்றை எட்டி பார்க்கிறான். பின், அவளுக்கு கைகொடுத்து அவளை கிணற்றுக்குள் இருந்து மீட்கிறான். மேலே வந்த தேவயானி இன்றிலிருந்து நான் உங்கள் மனைவி என யயாதியிடம் கூறுகிறாள். யயாதிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த விஷயம் சுக்ராச்சார்யாருக்கு தெரிந்து அவரும் அங்கு வந்துவிடுகிறார்.
இங்கிருந்து கிளம்பிச் சென்ற சர்மிஷ்ட்டை, தன்னுடைய அப்பாவிடம் சென்று சுக்ராச்சார்யார் மகள் தேவயானியை கிணற்றில் தள்ளிவிட்ட விஷயத்தை கூறுகிறாள். அவர் அடப்பாவி மகளே... இந்த விஷயம் சுக்ராச்சார்யாருக்கு தெரிந்தால் என்ன ஆவது? அவர்தான் அசுரர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதற்கே காரணம் என்கிறார். சுக்ராச்சார்யார் இல்லையென்றால் இந்திர லோகத்தில் உள்ளவர்கள் வந்து இவர்களை அழைத்துவிடுவார்கள். உடனே தன் ஆட்களை கூட்டிக்கொண்டு அந்த கிணறு இருக்கும் இடத்திற்கு கிளம்புகிறார். அங்கு யயாதி, சுக்ராச்சார்யார் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த அசுரன் ஓடிவந்து சுக்ராச்சார்யார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்பா மன்னிக்கவெல்லாம் முடியாது... வாங்க நாம் வேற ஊருக்கு போய்விடுவோம் என தேவயானி கூற, சுக்ராச்சார்யாரும் சம்மதிக்கிறார்.
உடனே அசுரன் ஐயா நீங்க எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க... தயவு செய்து நாட்டைவிட்டு மட்டும் போய்விடாதீர்கள் என்கிறார். அவர் உடனே மகள் தேவயானியைப் பார்க்க, நான் அவமானப்பட்டுவிட்டதால் இனி அங்கு வரமாட்டேன். அதனால் என் கணவன் யயாதியுடன் இணைந்து அவர் நாட்டிற்கே சென்றுவிடுகிறேன் என்கிறாள். சுக்ராச்சார்யார் யயாதியை அழைத்து என் மகளை உன் தேசத்திற்கே மனைவியாக அழைத்துச் சென்றுவிடு என்கிறார். அவனும் சம்மதித்துவிடுகிறான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அந்த அசுரன் பிரம்மை பிடித்தவன்போல நிற்கிறான். அப்படியென்றால் எங்களுக்கு விமோசனம் இல்லையா குருதேவா என சுக்ராச்சார்யாரிடம் கேட்க, அவர் மீண்டும் தேவயானியை பார்க்கிறார். என்னை அவமானப்படுத்தியவளை என்னுடன் பணிப்பெண்ணாக அனுப்புங்கள் என தேவயானி கூறிவிடுகிறாள். இனி நான்தான் கொடுக்கிற கை... அவள் வாங்குகிற கையாக இருக்க வேண்டும் என மிகப்பெரிய தண்டனையை சர்மிஷ்ட்டைக்கு கொடுக்கிறாள்.
-தொடரும்...