தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கே.பி.சுந்தராம்பாளின் இளமைக்கால வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் வீட்டு மாடியில் நான் எப்படி வாடகைக்குக் குடியேறினேன் என்றும் அப்போது அவர் போட்ட கண்டிஷன் குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அதன் பிறகு, அவருடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. தாய் இல்லாத எனக்கு, இன்னொரு அம்மா போலத்தான் கே.பி.சுந்தராம்பாள் கடைசிவரை இருந்தார். ஒருமுறை வலிமிகுந்த அவரது இளமைக்கால வாழ்க்கை குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன்.
கே.பி.சுந்தராம்பாள், மாடிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள பெல்லை திடீரென அழுத்துவார். அந்த மணிச்சத்தம் கேட்டவுடன் நான் கீழே இறங்கிவந்து என்னவென்று கேட்பேன். தெருவில் ஒருத்தன் ரொம்ப நேரமாக நிக்கிறான்... அவன் யாருன்னு விசாரி... என் மாமன் மகன் அனுப்பிய ஆளாக இருக்குமோன்னு எனக்குச் சந்தேகமாக இருக்கு என்பார். நான் உடனே சென்று யார், எதற்காக நிற்கிறார் என்றெல்லாம் விசாரித்து, இந்த வீட்டிற்கு அருகில் நிற்கக்கூடாது என்று கூறி அவரை அனுப்பிவைப்பேன். அவருடைய குடும்பத்தினரால் அவர் உயிருக்கு ஆபத்து இருந்ததால் எந்நேரமும் எச்சரிக்கையுடன் இருப்பார்.
ஒருநாள் என்னை அழைத்த கே.பி.சுந்தராம்பாள், என்னுடைய வாழ்க்கைப் பற்றி உனக்குக் கூறுகிறேன் என்று சொல்லியிருந்தேனல்லவா... இன்றைக்கு கூறுகிறேன் எனக் கூறி அவரது இளமைக்கால வாழ்க்கை குறித்து பகிரத் தொடங்கினார். கே.பி.சுந்தராம்பாளுக்கு அப்பா கிடையாது; அம்மா மட்டுமே. அதுபோக ஒரு தம்பி உண்டு. சொத்துபத்தெல்லாம் எதுவும் கிடையாது. அன்றன்றைக்கு உழைத்து தன்னுடைய குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்திவந்துள்ளார் கே.பி.சுந்தராம்பாள் அம்மா. கே.பி.சுந்தராம்பாளுக்கு 5 வயது இருக்கும்போது அவரது தம்பிக்கு 3 வயது. அந்த நேரத்தில் அவர்கள் குடும்பம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று உள்ளது. அங்கு சென்றால் நல்லது நடக்கும் என்ற ஐதீகம் இன்றும் உள்ளது. அந்தக் கோவிலில் குருக்களாக இருந்தவர் கே.பி.சுந்தராம்பாளின் அம்மாவிற்கு நன்கு தெரிந்தவர். இரு குழந்தைகளுடன் அந்தக் கோவில் குருக்களை வந்து சந்தித்த அவரது அம்மா, கரூரில் தனக்குத் தெரிந்த ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் சென்று பணம் பெற்றுவிட்டு வந்து தொழில்தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தான் திரும்பிவர 10 நாட்கள்வரை ஆகும் எனக் கூறி, அதுவரை தன்னுடைய இரு குழந்தைகளையும் நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தக்காலத்தில் நினைத்த உடனேயே ஓர் இடத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிவிட முடியாது. சாலைகள் மண் சாலைகளாகத்தான் இருக்கும். இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய நூறு ஆண்டுகள் நெருங்கப்போகின்றன. அந்த குருக்களும் சரி 10 நாட்கள்தானே நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார். அன்று இரவு கோவிலேயே அந்த இரு குழந்தைகளும் படுத்துக்கொண்டார்கள். மறுநாள் காலை வழக்கம்போல அந்த குருக்கள் சாமிக்கு பாடல் பாடி பூஜை செய்கிறார். பூஜை முடிந்த பிறகு கடவுளுக்குப் படைத்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு அந்த இரு குழந்தைகளிடத்தில் செல்கிறார். குருக்களிடம் பிரசாதத்தை வாங்கிய கே.பி.சுந்தராம்பாள், பூஜையின்போது அந்த குருக்கள் பாடிய சமஸ்கிருத பாடலை அப்படியே பாடியுள்ளார். 5 வயது குழந்தை அச்சு பிசகாமல் சமஸ்கிருத பாடலைப் பாடுவதைக் கேட்டு அந்த குருக்களுக்கு ஒரே ஆச்சர்யம். இந்தப் பாடல் உனக்கு யார் கற்றுக்கொடுத்தது என்று குருக்கள் கேட்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கதான பாடுனீங்க... உங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன் எனப் பதிலளித்துள்ளார் கே.பி.சுந்தராம்பாள். அதைக்கேட்டு குருக்களுக்கு இன்னும் அதிர்ச்சி. பின் அந்தக்குழந்தையை தட்டிக்கொடுத்து பாராட்டி, உனக்கு நிறைய ஞானம் இருக்கு... நீ நல்லா வருவ எனப் பாராட்டியுள்ளார்.
பத்து நாட்களைக் கடந்தும் அந்தக் குழந்தைகளின் அம்மா திரும்பிவரவில்லை. அந்த குருக்கள் நிறைய கஷ்டத்தில் வாழ்ந்த போதிலும், குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என அந்த அம்மாவிடம் கூறிய ஒரே காரணத்திற்காக 10 நாட்களைக் கடந்தும் அவர்களுக்கு இவரே அடைக்கலம் கொடுத்துள்ளார். பின், ஒருநாள் இந்தக்குழந்தைகளுக்கு ஏதாவது வழி பண்ணிக்கொடு இறைவா எனக் கடவுளிடம் வேண்டுகிறார். அவர் கடவுள்முன் நின்று கைகூப்பி வணங்கிக்கொண்டிருக்கையிலேயே ஒரு நாடக கம்பெனி கோவிலுக்குள் வருகிறது. கொடுமுடியில் நாடகம் போடுவதற்காக வந்துள்ள அவர்கள், அதற்கான வேலைகளை ஆரம்பிக்குமுன் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்துள்ளனர். நாடகம் நன்றாக நடக்கவேண்டும் என்பதற்காக அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யுங்கள் எனத் தேங்காய், பால், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை சாமானை குருக்களிடம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பூஜையை முடித்துக்கொடுத்துவிட்டு, அவர்கள் நாடகக்குழு பற்றி குருக்கள் கேட்டுள்ளார். பின், அவர்களிடம் இந்த இரு குழந்தைகளையும் நாடகக் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுள்ளார். அவர்கள் சிறிய குழந்தைகளாக இருக்கிறார்களே என நாடக்குழுவினர் தயங்க, சமஸ்கிருத பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடிய விஷயம் பற்றி குருக்கள் கூறியுள்ளார். மேலும், இவர்கள் முன் அந்தப்பாடலைப் பாடிக்காட்டும்படி கே.பி.சுந்தராம்பாளையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருநொடிகூட தாமதிக்காமல் கே.பி.சுந்தராம்பாள் அந்தப்பாடலை பாடிக்காண்பிக்கிறார். கே.பி.சுந்தராம்பாளின் குரல் வளத்தைக் கேட்டு நாடகக் கம்பெனியர் அனைவருக்கும் பெரிய ஆச்சர்யம். திருவிளையாடலில் பழம் நீயப்பா என்று படுவாரே அந்தக்குரல் வளம் அவருக்கு சின்ன வயதிலேயே இருந்துள்ளது. கே.பி.சுந்தராம்பாளின் குரல் வளத்தைக் கண்டு பிரமித்த நாடகக் கம்பெனியர் அவரை அப்படியே கட்டியணைத்துக்கொண்டனர்.