Skip to main content

பெண் வேடமிட்டு நடித்த ஆணுக்கு 100 கோடி டீல் பேசிய செல்வந்தர்... 1949இல் நடந்த சுவாரசிய சம்பவம்! 

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், பி.யு.சின்னப்பாவைச் சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டது குறித்தும், அதற்கு பி.யு.சின்னப்பா விதித்த நிபந்தனை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

என் அண்ணனிடம் இருந்து பணத்தைத் திருடிவிட்டுச் சென்னை வந்தது குறித்தும் வாகினி ஸ்டூடியோவிற்கு வாய்ப்பு தேடிச்சென்று அங்கிருந்து வாய்ப்பு கிடைக்காமல் திரும்பிவந்தது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அண்ணனிடம் இருந்து திருடிய பணத்தில் இன்னும் கொஞ்சம் மீதம் இருந்ததால் மாடர்ன் தியேட்டருக்குச் சென்று வாய்ப்பு கேட்கலாம் என்று நினைத்து அங்கு சென்றேன். நரசிம்ம பாரதி கதாநாயகனாக நடித்த பொன்முடி படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. அந்தப்படத்திற்குப் பாரதிதாசன் கதை வசனம் எழுதினார். அந்த ஸ்டூடியோ வாசலில் நின்று கொண்டிருந்த என்னை அங்கிருந்த வாயில் காவலாளி, "நடிகர்கள் வருகிற நேரம்... இங்கெல்லாம் நிற்ககூடாது.. போ..போ..." என்று கூறி விரட்டினார். அப்போது நரசிம்ம பாரதியும் மாதுரி தேவியும் வந்திறங்கினார்கள். நான் அப்போதுதான் முதன்முறையாக சினிமா நடிகர்களைப் பார்க்கிறேன். இருவரும் வானலோகத்தில் இருந்து இறங்கிவந்த தேவதைகள் மாதிரி இருந்தனர். நான் அவர்களை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் இருவரும் உள்ளே சென்றுவிட்டனர். வாயில் காவலாளி அங்கிருந்து கிளம்ப வற்புறுத்தியதால் நான் கிளம்பிவந்துவிட்டேன்.

 

இங்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இதற்கிடையே பி.யு.சின்னப்பா விலாசத்தையும் தெரிந்து வைத்திருந்தேன். அவர் புதுக்கோட்டையில்தான் வசித்துவந்தார். நடிப்பதற்காக மட்டும் அவ்வப்போது சென்னை வருவார். அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போன்ற பேரும்புகழும் பி.யு.சின்னப்பாவிற்கும் இருந்தது. பி.யு.சின்னப்பா நடிப்பு சிவாஜி போலவும், சண்டைபோடும் விதம் எம்.ஜி.ஆர் போலவும் இருக்கும். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கலந்த கலவையாக பி.யு.சின்னப்பா இருந்தார். வாய்ப்பு கேட்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு, "தம்பி நீ பார்க்க ஆள் நல்லாத்தான் இருக்க... ஏதாவது நாடகக் கம்பெனிக்குப் போறியா" என்றார். மேலும், "நீ நாடகத்தில் நடித்துவிட்டு வா.. உன்னப் படத்தில் நடிக்க நான் சேர்த்துவிடுறேன்" என்றார். அவர் கூறியதைக் கேட்டு எனக்கு மிகுந்த சந்தோசம். அந்தச் சந்தோசத்திலேயே கிளம்பி ஊருக்கு வந்துவிட்டேன். 

 

என் அண்ணனிடம் வந்து விஷயத்தைக் கூறினேன். முதலில், நான் பி.யு.சின்னப்பாவைப் பார்த்துவிட்டு வந்தேன் என்ற விஷயத்தை என் ஊரில் யாருமே நம்பவில்லை. பின், அது உண்மை என்று தெரிந்து எங்கள் வீட்டின் முன் ஊரே திரண்டுவிட்டது. நாடகத்தில் நடித்துவிட்டு வா... வாய்ப்பு தருகிறேன் என்று பி.யு.சின்னப்பா கூறியதாக என் அண்ணனிடம் கூறியதும் கடன் வாங்கி எனக்காக 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற நாடகத்தை ஆரம்பித்துவிட்டார். நான் அதில் வில்லனாக நடித்திருந்தேன். நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் இது என் அண்ணன் போட்ட சொந்த நாடகம். ஏதாவது நாடகக் கம்பெனியில் நடித்து அதற்கான சான்றிதழோடு வா என்று  பி.யு.சின்னப்பா கூறியிருந்தார். அதனால் விருதுநகரில் என் அண்ணனுக்கு தெரிந்த ஒரு நாடகக் கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு 'விதி' என்று ஒரு நாடகம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அங்கிருந்த பெண்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருந்தார்கள். சினிமாவில்கூட அப்படி அழகான பெண்களைப் பார்க்க முடியாது. நானும் என் அண்ணனும் அங்கு உட்கார்ந்து நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

நாடகம் முடிந்தவுடன் நாடகக்குழு தலைவரிடம் சென்ற செல்வந்தன் ஒருவர், கையில் ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை என்னுடன் அனுப்பு என்றார். அன்றைக்கு ஒரு லட்சம் என்றால் இன்றைக்கு நூறு கோடி. 'யோவ்... போய் வேற வேல இருந்தா பாருயா..' என்று அந்த நாடகக் கம்பெனி முதலாளி அவரிடம் கூறினார். ஆனாலும் அவர் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த முதலாளி செல்வந்தரை அருகில் அழைத்து, 'அது பொண்ணு இல்லயா... ஆம்பள' என்றார். என்னை ஏமாத்தப் பாக்குறீங்களா என்று கூறி செல்வந்தர் தொடர்ந்து ரகளை செய்துவந்தார். இது அனைத்தையும் பெண் வேடம் அணிந்த அந்த நபர் உள்ளே இருந்து கேட்டுக்கொண்டு இருந்தார். முதலாளி எவ்வளவு கூறியும் அந்த செல்வந்தர் கேட்காததால் அரை டவுசருடன் வெளியே வந்த அந்த நபர், 'யோ... என்னயா என்னை வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்க... நான் ஆம்பளையா' என்றார். 'நீ ஆம்பளையா...' என அந்த செல்வந்தர் மேலும் கீழும் பார்த்தார். பின், 'சரி... ஆம்பளையா இருந்தாலும் நான் கூட கூட்டிட்டு போறேன்... நான் அந்த நினப்புலயே நிறைய கனவு கண்டுவிட்டேன்... இந்த பணத்தை வாங்கிவிட்டு அந்தப் பையன என்கூட அனுப்புங்க' என்றார். அதைக் கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சி.

 

உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்து தலையிட்டு அந்த செல்வந்தரை அனுப்பி வைத்தனர். போகும்போது 'என்னை மீறி இந்த ஊரில் இனி எப்படி நாடகம் நடத்துறீங்கன்னு பார்க்குறேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றார். நாடகக்கம்பெனி முதலாளியை அழைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர், 'அந்தாளு கொஞ்சம் விவகாரமான ஆளு... நாடகக் கொட்டகைக்கு தீ வச்சாலும் வச்சுடுவான்... நீங்க கம்பெனிய காலிபண்ணிட்டு வேற ஊருக்கு போயிருங்க என்றார். அந்த முதலாளியும் சரி எனக்கூறி நாடகக்கம்பெனியை அங்கிருந்து காலி செய்தார். வாய்ப்பு தேடிவந்த எனக்கு இங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண் வேடமிட்டு அந்த நாடகத்தில் நடித்தது நடிகர் முத்துராமனின் மச்சினன். பின்னாட்களில் அவர்தான் அன்னக்கிளி படத்தை இயக்கினார். அந்தக் காலத்தில் பெண் வேடமிட்டு நடிப்பதில் அவரை மிஞ்ச ஆட்களே கிடையாது. விருதுநகரில் இருந்து நாடகக் கம்பெனியைக் காலி செய்துகொண்டு அவர்கள் மதுரைக்குச் சென்றுவிட்டார்கள். நாடகக்கம்பெனியில் நடித்து அந்தச் சான்றிதழுடன் சென்று பி.யு.சின்னப்பாவைச் சந்திக்க வேண்டும் என்பதால் நான் அடுத்து என்ன முடிவெடுத்தேன் என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.