Skip to main content

"நான் நடித்த படத்தை பார்க்க வந்த என் நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி" கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், செல்லப்பிள்ளை படத்தில் முதன்முறையாகத் திரையில் தோன்றியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

நாடகத்தில் நடித்துவிட்டு வந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பி.யு.சின்னப்பா கூறியதால் எனக்காகக் கடன் வாங்கி என் அண்ணன் நாடகத்தை ஆரம்பித்தார். நான் அந்த நாடத்தில் நடித்துக் கொண்டிருக்கையிலேயே பி.யு.சின்னப்பா இறந்துவிட்டார். அதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் அம்மாதான் சென்னை சென்று கே.பி.காமாட்சியைச் சந்திக்கச் சொன்னார். கே.பி.காமாட்சி என் அம்மாவிற்கு தம்பி முறை. சிறு வயதில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடி இருப்பதாகக் கூறினார். அவரிடம் சென்று நீ வாய்ப்பு கேள். நிச்சயம் உனக்கு வாய்ப்பு வாங்கித்தருவார் என்று என் அம்மா கூறியதால் கே.பி.காமாட்சியைப் பார்க்க சென்னை வந்தேன்.

 

அவரிடம் சென்று என் அம்மாவின் பெயரைக்கூறி என்னை அறிமுகம் செய்ததும் அவருக்குக் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. என்ன விஷயமாக வந்திருப்பதாக என்னிடம் கேட்டார். நான் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கும் விஷயத்தைக் கூறியதைக் கேட்டு என்னை மேலும் கீழும் பார்த்தார். அதென்ன கையிலே மினுக்குது என்றார். ஒன்னுமில்லையே என்று என் கையைப் பார்த்தேன். விரலில் உள்ள மோதிரம் தங்கமா என்றார். ஆம் என்றவுடன் அதைக் கழட்டி தெருமுனையில் உள்ள மார்வாடி கடையில் விற்றுவிட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு சாராயம் வாங்கிவிட்டுவரச் சொன்னார். சுடுகாட்டிற்கு அருகே ஒருவர் சாராயம் காய்ச்சி விற்றுக்கொண்டு இருப்பார் என்று இடத்தையும் என்னிடம் கூறி அனுப்பினார். 

 

ஒருவேளை சென்னையில் இருந்து ஊருக்குத் திரும்ப நினைத்து, கையில் பணமேதும் இல்லாத நிலை ஏற்பட்டால் இந்த மோதிரத்தை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து ஊர் வந்துசேர் என்று என் அம்மா சிறிய தங்க மோதிரத்தை என் கையில் போட்டுவிட்டிருந்தார். அதை விற்று அவருக்குச் சாராயம் வாங்கிக்கொடுத்தேன். சாராயம் குடித்தால்தான் அவருக்கு சுறுசுறுப்பே வரும். சாராயம் குடித்துவிட்டுத்தான் சாப்பிடவே செய்வார். அவர் ஒரு இட்லி சாப்பிட்டார். எனக்கு இரண்டு இட்லி கொடுத்தார். சாப்பிட்டு முடித்தவுடன் என்னை அழைத்தார். ஏ.வி.எம்மில் இருந்து என்னை அழைக்க ஒரு வண்டி வரும். அதில் ஏறி என் கூட வா என்றார். எனக்குச் சந்தோசம் தாங்கவில்லை. அன்றைக்குக் காலையில்தான் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இருந்த வாட்ச்மேன் என்னை விரட்டிவிட்டார். இப்போது நான் காரில் உள்ளே செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்தார். நானும் அவரை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றேன்.

 

ஸ்டூடியோவிற்குள் இறங்கியதும் அவ்வளவு மரியாதை. ஏ.வி.எம் செட்டியாருக்கு அடுத்து அதிகப்படியான மரியாதை அங்கு உண்டு என்றால் அது கே.பி.காமாட்சிக்குத்தான். காரணம், அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் அந்த அளவிற்கு வெற்றிபெற்றன. ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு அவரை நிரந்தரமாகப் பாட்டெழுதும் வேலைக்கு அங்கு நியமித்திருந்தார்கள். கே.பி.காமாட்சியை ஏ.வி.எம்மில் வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். கே.பி.காமாட்சி வருகிறார் என்றால் அங்கிருக்கும் மேனேஜர்கள் எல்லாம் எழுந்து நின்று வணக்கம் செய்வார்கள். 

 

நாங்கள் உள்ளே சென்றபோது செல்லப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தப்படத்தில் கே.ஆர்.ராமசாமி, சாவித்திரி, டி.எஸ்.பாலையா இணைந்து நடித்திருந்தனர். படத்தை எடுத்து முடித்த பிறகு ஏ.வி.எம் செட்டியார் படத்தைப் பார்த்துள்ளார். அவருக்குத் திருப்தியில்லை. அதனால் சில காட்சிகளை மீண்டும் படமாக்கினார்கள். அப்படி படமாக்கி கொண்டிருக்கையில்தான் நான் அங்குச் சென்றேன். காமாட்சி அண்ணன் எழுதிய சீட்டாட்டம் என்ற பாடலுக்கான காட்சிகளை படமாக்கத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். காமாட்சி அண்ணன் அங்கிருந்த உதவி இயக்குநரை அழைத்து, இவன் என் தம்பி... இவனுக்கு ஒரு வேஷம் கொடு என்றார். உடனே என்னை உள்ளே அழைத்து மேக்கப் போட்டார்கள். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மேக்கப் முடிந்ததும் காமாட்சி அண்ணன் வந்து என்னை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார். ஏதோ புது கதாநாயகனை அறிமுகம் செய்வதுபோல எல்லாம் நடந்தது. ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த ஷெட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள்.

 

அங்கு ஒவ்வொரு வட்டமேசையிலும் ஆறுபேர் அமர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒருவரை எந்திரிக்கச் சொல்லிவிட்டு என்னை உட்கார வைத்தார்கள். கையில் சீட்டை எடுத்துப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் காட்சி என்றார்கள். சரியாக எனக்கு முன்னால் கேமராவைப் பொறுத்தினார்கள். அண்ணன் சொல்லியதற்காக நம்மை ஸ்பெஷலாக எடுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஒரு ட்ராலி ஷாட் எடுத்தார்கள். தம்பி உங்க காட்சி முடிந்துவிட்டது. எந்திரிங்க என்றார்கள். நாமதான் நடிக்கவேயில்லையே அதற்குள் எழுந்திரிக்க சொல்லிட்டார்களே என்று எனக்கு ஒரே குழப்பம். சரி கேமரால நம்மள படம் பிடிச்சிட்டாங்களா... அப்படின்னா நிச்சயம் திரையில் தெரிவோம். இந்த விஷயத்தை ஊருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி என் அண்ணனுக்கு லெட்டர் போட்டேன். விஷயம் தெரிந்தவுடன் ஊரில் அனைவருக்கும் ஆச்சர்யம். சில நாட்கள் கழித்து நான் ஊருக்கு சென்றேன். எங்கள் வீட்டருகே ஊரே கூடிவிட்டது. படத்தில் நடித்ததுபற்றி அனைவரும் விசாரித்தார்கள்.

 

என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உடனே ஒரு நாடகத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். செல்லப்பிள்ளை புகழ் பாலையா நடிக்கும் உத்தமன் என்று போர்டு போட்டுவிட்டனர். ஒரு படத்தில் நடித்தவுடன் பாலு என்ற என்னுடைய பெயரை பாலையா என நண்பர்கள் மாற்றிவிட்டனர். சினிமாவில் நடித்தவன் நடிக்கும் நாடகம் என்றவுடன் கூட்டம் கூடிவிட்டது. நாடகம் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. எங்கள் ஊரைச் சுற்றி இருந்த 30 கிராமங்களுக்கும் நான் சினிமாவில் நடித்த விஷயம் தெரிந்துவிட்டது. ஒரு வாரம் கழித்து செல்லப்பிள்ளை திரைப்படம் வெளியானது. என் நடிப்பை திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நண்பர்கள் மதுரையில் இருந்த திரையரங்கிற்கு என்னையும் அழைத்துச் சென்றனர். மொத்த படமும் முடிந்துவிட்டது. என் முகம் திரையில் வரவேயில்லை. இவன் சினிமாவில் நடிச்சிருக்கேன்னு சொல்லி நம்மளை ஏமாத்திட்டான்டா... நாமதான் அநாவசியமா செலவு பண்ணிட்டோம்னு என்னைத் திட்டிக்கொண்டே சென்றார்கள்.

 

எனக்கு அவமானம் தாங்கமுடியவில்லை. அந்த அவமானம் தாங்க முடியாததால் நான் ஊருக்கு செல்லவில்லை. அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். நம்ம முன்னாடிதான் கேமராவை வச்சாங்க... நாமளும் சீட்டுக்கட்டை பார்த்து நடிச்சோம். பின்ன எப்படி நம்ம முகம் வராமல் போகும் என்று யோசித்துக்கொண்டே மீண்டும் படம் பார்க்க முடிவெடுத்து ஈவ்னிங் ஷோவிற்கு சென்றேன். உன்னிப்பாக கவனித்தால் என் முகம் தெரிகிறது. ஆனால், அடுத்த நொடியிலேயே கேமரா நகன்றுவிடுகிறது. நான் உடனே ஊருக்கு சென்று, என் முகம் தெரியுதுடா... என் முகத்துல இருந்துதான் கேமரா நகருதுடா என்றேன். என் நண்பர்கள், கம்முனு போடா என்று கூறிவிட்டனர். அனைவருமே மிகவும் விரக்தியடைந்துவிட்டனர். என் வாழ்க்கையில் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.