தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தனக்கு 12 வயதாக இருக்கும்போது தாத்தா வீட்டில் இருந்து இரவோடு இரவாக தான் தப்பி வந்தது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
என்னுடைய தாத்தா தோட்டத்தில் இருந்த மிளகாய் பழத்தைத் தாத்தாவிற்குத் தெரியாமல் திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணம் மூலமாக சினிமாவிற்கு போனது பற்றி கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அன்று சினிமாவிற்குச் சென்றதால் இரவு சாப்பிடவில்லை. சினிமாவிற்கு சென்ற விஷயம் தெரிந்ததால் தாத்தா அடித்துவிட்டார். தாத்தா வீட்டிலிருந்து சோளச்சோறு கொடுத்துவிட்டிருந்த போதிலும், தாத்தா அடித்துவிட்டதால் அதைச் சாப்பிடவில்லை. என் மாமாவிடம் சொல்லி என் முதுகுத்தோலை உரித்துவிடுவதாக தாத்தா எச்சரித்ததையடுத்து, பயத்தில் தாத்தா ஊரிலிருந்து நடந்தே ஆண்டிபட்டி வந்துவிட்டேன். இரவு 2 மணி டூரிங் டாக்கீஸ் முடிந்து அனைவரும் படுத்துவிட்டனர். ஊரே அமைதியாக இருந்தது. எனக்குப் பசி தாங்கமுடியவில்லை. ஒரேயொரு ஓட்டல் மட்டும் இருந்தது. அவரும் கடையைப் பூட்ட தயாராகிக்கொண்டு இருந்தார். என் கையில் காசும் கிடையாது. அதனால் அவரிடம் சென்று உணவு கேட்க கூச்சமாக இருந்தது. நான் அங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவரே என்ன வேண்டும் என்று கேட்டார். நான் பசிக்குது எனக் கூறியவுடன் உள்ளே இருந்து சோறு எடுத்துக்கொண்டு வந்தார். பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த மிச்ச சோற்றை எடுத்துவந்தார். கடை போட்டும் நேரம் என்பதால் அதுதான் இருந்தது. இரக்கக்குணம் உடையவராக அவர் இருந்ததால் அந்த நேரத்தில் சோறு கிடைத்தது. விடியக்காலை 4 மணி ஆகிவிட்டது. ஆண்டிபட்டியில் இருந்து 20 மைல் தொலைவில் இருந்தது எங்கள் ஊர் எழுமலை. இரவு நேரமாக இருந்ததால் இன்னும் கொஞ்சம் விடியட்டும் என்று நினைத்து ஆண்டிபட்டியிலேயே ஒரு கடை வாசலில் படுத்துவிட்டேன்.
அசந்து தூங்கிக்கொண்டு இருக்கையில், தாத்தா கூறியதைக் கேட்டு என் மாமா வந்து என்னை அடித்து தோலுரிப்பதுபோல கனவு வந்தது. பதறியடித்து எழுந்தேன். நான் கத்தியதைக் கேட்டு பக்கத்து கடைக்கு வெளியே படுத்திருந்தவர்களும் பதறி எழுந்துவிட்டனர். இனி இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்து உசிலம்பட்டி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். உசிலம்பட்டி போய்விட்டால் அங்கிருந்து போகும் ஏதாவது வண்டியில் ஏறிச் சென்றுவிடலாம் என்பது என்னுடைய திட்டம். அந்த இருட்டிற்குள்ளேயே நடக்க ஆரம்பித்தேன். போகும் வழியில் பெரிய கணவாய் இருந்தது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்தக் கணவாய் வழியாகத்தான் மதுரையிலிருந்து போடி செல்லும் ரயில் போகும். அந்தக் கணவாய் வழியாகச் சென்றால் தூரம் குறைவு. அதனால் கணவாய் வழியாகவே பாறையில் கைவைத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். கணவாய் உள்ளே ஆந்தை அகவும் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. முக்கால் மணிநேரம் நடந்து கணவாயின் அந்தப்பகுதியை அடைந்தேன். அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது.
அங்கிருந்து உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றேன். கிளார்க் மகன் என்று சொன்னால் யாரவது என்னை கொண்டுபோய் எங்கள் ஊரில் விட்டுவிடுவார்கள். என் அப்பாவிற்கு அந்த அளவிற்கு நல்ல பெயர் இருந்தது. எங்க ஊர் பஸ்களுக்கான ஏஜென்ட் அய்யனத்தேவர் என்னைப் பார்த்துவிட்டார். இருந்தாலும் அவருக்கு என்னை சரியாக அடையாளம் தெரியவில்லை. என்னை அழைத்து விசாரிக்கையில் எழுமலை கிளார்க் மகன் என்றேன். 'இந்த நேரத்துல இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க... எங்க இருந்து வர்ற' என்று அவர் கேட்க, நான் அனைத்தையும் விளக்கிக்கூறினேன். மதுரையில் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருந்த என் அக்கா, என் அம்மாவைப் பார்ப்பதற்காக எழுமலை சென்றிருப்பதாகவும் அவர் அடுத்த பஸ்ஸில் திரும்பிவந்துவிடுவாரென்றும், அவரிடம் என்னை ஒப்படைத்துவிடுவதாகவும் கூறினார். எங்கள் ஊருக்கு அந்த ஒரு பஸ்தான். அதனால் அடுத்த பஸ்ஸில் அவர் வந்துவிடுவார் என உறுதியாகக் கூறினார். அதேபோல என் அக்கா அடுத்த பஸ்ஸில் வந்தார். பஸ் ஸ்டாண்டில் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என்னைக் கட்டிபிடித்துவிட்டார். எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது. எங்க அக்காவிற்கு ஒரு வயசில் கைக்குழந்தை ஒன்று இருந்தது. 'இவன நம்ம வீட்டிற்கு கூட்டிட்டுப் போவோம்ங்க... பிள்ள தூக்க ஆள் இருந்த மாதிரி இருக்கும்' என அவர் வீட்டுக்காரரிடம் கேட்டார். அவரும் சரி எனக் கூறிவிட்டதால் நான் அவர்களுடன் மதுரை சென்றுவிட்டேன். அந்த கைகுழந்தைதான் தற்போது என்னுடைய மனைவி.