தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தன்னுடைய இளமைக்காலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
என் அக்கா வீட்டில் இருந்து ஏன் பெரியப்பா வீட்டிற்கு வந்தேன் என்பது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். பெரியப்பா வீட்டில் ஆடு மேய்ப்பது என் வேலை. காடுகளில் இருக்கும் தட்டாங்காய், சோளக்கருது, கம்பங்கருது ஆகியவைதான் மதிய உணவு. ஆடு மேய்த்துக்கொண்டே அதைப் பிடுங்கி சாப்பிட்டுக்கொள்வோம். அதுபோக மாம்பழம், கொய்யாப்பழம் என அந்தந்த சீசனுக்கு ஏற்றதுமாறி காடுகளில் பறித்துச் சாப்பிடுவோம். ராத்திரி ஒருவேளை மட்டும்தான் வீட்டில் கஞ்சி காய்ச்சுவார்கள். பொதுவாகவே அந்தக் காலத்தில் கிராமத்தில் ஒருவேளைதான் கஞ்சி காய்ச்சுவார்கள்.
ஒருநாள் மதிய நேரம் நல்ல பசி எடுத்தது. கம்பங்கருது இருக்குதா... சோளக்கருது இருக்குதா... வேலியில் ஏதும் கோவம்பழம் இருக்குதா என தேடிக்கொண்டிருக்கையில் என்னுடைய ஆடு பக்கத்து வெள்ளாமையில் மேய்ந்துவிட்டது. அதைத் தோட்டக்காரன் பார்த்துவிட்டான். “அடேய் இங்க வாடா” எனக் கூப்பிட்டு, “நான் கஷ்டப்பட்டு தண்ணி இறைச்சு வெள்ளாமை வச்சுக்கிட்டிருக்கேன்... நீ ஆட்ட மேயவிடுறியா” என்று கூறி முதுகில் அடித்துவிட்டார். அந்தப் பகுதியில் தண்ணி கஷ்டம் நிறைய இருந்தும் ரத்தத்தை வேர்வையாக்கி விவசாயம் பார்த்தார்கள். அதனால் வெள்ளாமைக்கு அழிவு வந்ததுனா அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. தோட்டக்காரன் அடித்த அடியில் முதுகு சிவந்துவிட்டது. அதிகம் வலி எடுத்ததால் ஆட்டைப் பத்திக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்றேன். பசி இன்னும் அடங்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ஆட்டின் மடி கண்ணில் பட்டது.
என்னுடைய பெரியப்பா தினமும் வெள்ளாட்டம்பால் குடிப்பார். அதற்காகத்தான் அவர் வீட்டில் வெள்ளாடு வளர்த்தார். அவர் கறந்து குடித்ததுபோக மீதமுள்ளதைக் குட்டி குடிக்கும். அன்று, பால் சுரந்து மடி பந்துபோல பெரிதாக இருந்தது. அதைப் பார்த்தவுடன், ‘இதை ஏன் நம்ம குடிக்கக்கூடாது’ என்று எனக்கு யோசனை வந்தது. ‘சரி... கொஞ்சம் குடித்துவிட்டு மீதியைப் பெரியப்பாவிற்கு விட்டுவைப்போம்’ என்று முடிவெடுத்து ஆட்டின் மடிக்குக் கீழே படுத்துக்கொண்டு, பீய்ச்சி குடிக்க ஆரம்பித்தேன். குடிக்க குடிக்க நன்றாக இருந்ததால் மொத்த மடியையும் காலி பண்ணிவிட்டேன். பீய்ச்சும்போது பால் வராததைப் பார்த்த பிறகுதான் மடி காலியாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது. இந்த விஷயம் தெரிந்தால் பெரியப்பா அடி வெளுத்துவிடுவார். காலையில் தோட்டக்காரனிடம் அடி வாங்கியாச்சு... மாலையில் பெரியப்பாவிடம் அடி வாங்க வேண்டும் என்பதை நினைத்து எனக்குப் பயமாகிவிட்டது. பசும்புல் நன்றாக மேய்ந்தால் பால் அதிகமாக சுரக்குமென்பதால் புல் புடுங்கிவந்து போட்டேன். அது நன்றாக சாப்பிட்டு அசைபோட்டது. ஆனால், மடி மட்டும் பெருசாகவில்லை. இன்றைக்குப் பெரியப்பாவிடம் அடிவாங்குவது உறுதி என்பது தெரிந்தவுடன், வீட்டிற்குச் சென்று ஆட்டைக் கட்டிவிட்டு பெரியப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டேன்.
எழுமலைக்கு வந்து என் அம்மாவுடன் சேர்ந்து சில நாட்கள் இருந்தேன். பின், என் அம்மா நம் தாத்தா ஊருக்கே செல்வோம் என்று கூறி என்னை, என் தங்கச்சியை, என் தம்பியை அழைத்துக்கொண்டு தாத்தா வீட்டிற்கு வந்துவிட்டார். என் தாத்தா வீட்டிலிருந்து ஓடித்தான் மதுரை சென்றேன். அங்கிருந்து ஓடிவந்து என் பெரியப்பா வீட்டிற்குச் சென்றேன். பின், அங்கிருந்து எங்கள் ஊருக்கு ஓடிவந்தேன். இப்போது மீண்டும் தாத்தா ஊருக்கே வந்துவிட்டேன். அந்தக் காலத்தில் கொண்டையம்பட்டி கொய்யாப்பழம் என்றால் மிகவும் பிரபலம். அங்குபோய் கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டு வந்து கூடையில் வைத்து ரோட்டில் நின்று விற்க ஆரம்பித்தேன். நானும் என் தங்கச்சியும் சேர்ந்து விற்போம். கொய்யாப்பழம் வாங்குவதற்காக அதிகாலையிலேயே எழுந்து நான், என் தங்கச்சி, தம்பி என மூவரும் கொண்டையம்பட்டியை நோக்கி நடக்க ஆரம்பிப்போம். அங்கு கிலோ கணக்கெல்லாம் கிடையாது. 25 காசு கொடுத்தால் ஒரு கூடை நிறைய பறித்துக்கொள்ளலாம். வெளியே காசு கொடுத்துவிட்டு உள்ளே தோட்டத்திற்குள் சென்று பறிக்க ஆரம்பிப்போம். அங்கிருந்த நடந்து வந்த களைப்பிற்கு நாங்களே பிடுங்கி திங்கவும் செய்வோம். என் தம்பி கொய்யாப்பழம் திண்பதற்காக எங்களுடன் வருவான். ஒரு கட்டத்தில் என்னுடைய அம்மாவிற்கும் தாத்தாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால் அங்கிருந்து கிளம்பி மீண்டும் எங்கள் ஊருக்கே வந்துவிட்டோம்.
எங்கள் ஊரில் பருத்தி சீசன் ஆரம்பித்திருந்தது. ஆட்கள் எல்லாம் பருத்தி பறிக்க தோட்டத்தில்தான் இருப்பார்கள். என் அம்மா பயறு, கிழங்குகளை அவித்து தோட்டத்திற்குள் சென்று விற்பார். பண்டமாற்று முறையில் அவர்களிடம் இருந்து பருத்தி வாங்கிக்கொள்வார். அதைக் கடையில் கொடுத்து காசாக்கி, அதிலிருந்து கிடைக்கும் பணம் மூலமாக குடும்பம் நடத்தினார். அந்த நேரத்தில் திடீரென நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டேன். நாளடைவில் நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்று, எழுந்து நிற்கவே முடியாதபடி ஆகிவிட்டது. காலையில் கிழங்கு விற்க சென்றால் ராத்திரிதான் என் அம்மா வீட்டிற்கு வருவார். என்னென்ன நாட்டு வைத்தியமோ செய்து பார்த்தார்கள், ஆனாலும் குணமாகவில்லை. ஒரு கட்டத்தில் ரொம்பவும் சீரியஸாகி அகப்பை குச்சிபோல ஆகிவிட்டேன். நான் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான்... இல்லாததும் ஒன்றுதான் என்ற நிலைக்கு என் அம்மா வந்துவிட்டார். பயறு, கிழங்கு விற்றுவிட்டு வரும்போது, அநேகமாக இந்நேரம் அண்ணன் செத்திருப்பான்டி என என் தங்கச்சியிடம் கூறிக்கொண்டே வருவாராம். வீட்டில் வந்து பார்த்தால் நான் உயிரோடு படுத்திருப்பேன். உடம்பெல்லாம் சிரங்கு வந்துவிட்டது. தினமும் வரும்போது இந்நேரம் செத்திருப்பான் என்றுதான் நினைத்துக்கொண்டே வருவாராம்.
இவனை வச்சிட்டு நம்மாள வளக்க முடியலையே... இவன் செத்தால்கூட பரவாயில்லை என்று ஒரு தாய் நினைத்தால் அவர் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார். “கடவுளே, இவன ஏன் இன்னும் நீ கூப்பிடல...” என்று கூறி தினமும் என் பக்கத்தில் உட்கார்ந்து அம்மா அழுவார். திடீரென ஒருநாள், உடம்பில் தெம்பு ஏற்பட்டு நானே எழுந்து உட்கார்ந்துவிட்டேன். கிழங்கு விற்றுவிட்டு ராத்திரி வீட்டிற்கு வந்த என் அம்மா, நான் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்துவிட்டார். “டேய்... நீ இன்னும் சாகலயாடா... நீ செத்திருப்பன்னு நினச்சேன்” என்றார். அதன் பிறகு, மருந்து காய்ச்சிக் கொடுத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் என்னால் குடிக்க முடிந்தது. நான் 12 வயதில் மீனாட்சிக்கு தீவட்டி சுமந்தேன். அப்படியிருக்கையில் அவள் என்னை 13 வயதில் சாகடித்துவிடுவாளா? அந்த மதுரை மீனாட்சிதான் என் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தாள். 15 வயதில் நல்லா உடம்பு ஏறி ஹீரோ மாதிரி ஆகிவிட்டேன். நான் பார்க்க டி.எஸ். பாலையா மாதிரி இருப்பதாக அப்போது என் நண்பர்கள் கூறுவார்கள்.