தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கள்ளக்காதலுக்கு உதவிசெய்து ஊர் மக்களிடம் அவர் அடிவாங்கிய சம்பவம் குறித்து பகிர்துகொண்டவை பின்வருமாறு...
என்னுடைய அப்பா ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அவரிடம் இருந்தது வெறும் ஆறு ரூபாய்தான். அன்றைய காலத்தில் ஆறு ரூபாய் என்றால் அதை வைத்து ஐந்து மாதத்திற்கு குடும்பம் நடத்தலாம். அப்படிப்பட்ட கஷ்டமான நிலையில்தான் என் அம்மா குடும்பம் நடத்திவந்தார். சிறு வயதாக இருக்கும்போதிலிருந்தே சினிமா, நாடகம் மீது எனக்கு ஆர்வம் திரும்பியது. 1938 காலத்தில் எங்கள் ஊருக்கு முதல்முறையாக சினிமா வருகிறது. வேலுசாமி நாடார் என்பவர் எங்கள் ஊருக்கும் ஆண்டிபட்டிக்கும் மாறிமாறி சினிமா போடுவார். அதுவரை நாடகம் மட்டுமே பார்த்த நான், சினிமாவை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். ஒன்னேகால் அணா கொடுத்தால் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம். இரண்டு அணா கொடுத்தால் பெஞ்சில் உட்கார்ந்து பார்க்கலாம். அப்போது இதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய அம்மாவிற்குத் தெரியாமல் வீட்டிலிருந்து இரண்டு அணா எடுத்துக்கொண்டு சென்றேன். அதை வாங்கிக்கொண்டு பின்வரிசையில் போட்டிருந்த பெஞ்சில் என்னை உட்கார வைத்தார்கள். திரையில் இருந்து தூரத்தில் இருந்ததால் படம் நன்றாகத் தெரியாது என்று நினைத்துக்கொண்டே படம் பார்க்க ஆரம்பித்தேன். திரைக்கு அருகே அமர்ந்து பார்த்தால்தான் படம் நன்றாகத் தெரியும் என்பது எட்டு வயதில் என்னுடைய புரிதல். அப்படி நான் முதன்முதலில் பார்த்த படம் கருணாநிதியின் தாய்மாமன் நடித்த ‘கிருஷ்ண லீலை’ திரைப்படம்.
படம் முடிந்த பிறகு, 'இந்தத் திரைக்குள்தான படத்தில் வந்த அந்த வீடு இருந்தது என்று நினைத்து திரைக்குப் பின்னால் சென்றெல்லாம் பார்த்தேன். அங்கு வெறும் சவுக்கு கம்புகள் மட்டும் இருந்ததைப் பார்த்துக்கொண்டு, படம் முடிந்த பிறகு அந்த வீட்டையும் கழட்டி எடுத்துச் சென்றுவிடுவார்களோ' என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்தேன். இரண்டு அணா எடுத்துச் சென்று நான் படம் பார்த்த விஷயம் தெரிந்து என் அம்மா என்னை அடி வெளுத்துவிட்டார். 'இந்தக் காச வச்சுத்தான் கேப்பை வாங்கி உங்களுக்குக் கஞ்சி காய்ச்சிக்கிட்டிருக்கேன். நீ இதைத் தூக்கிட்டுப்போய் சினிமா பாக்குறியா... நாளைக்கு இரண்டு அணா கொடுத்தாத்தான் உனக்கு சோறு போடுவேன்... போடா...' என்று கூறி என்னை விரட்டிவிட்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நேரே வேலுச்சாமி நாடாரிடம் சென்று எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்றேன். “சின்னப்பயலா இருக்க... உனக்கு என்னடா வேலை தெரியும்” என்றார். அப்போது எனக்கு 8 வயதுதான். நான் அவரிடம், என் அம்மாவிற்குத் தெரியாமல் வீட்டிலிருந்து இரண்டு அணா எடுத்துவந்து படம் பார்த்த விஷயம் குறித்தும், அது அம்மாவிற்கு தெரிந்ததால் என்னை அடித்தது குறித்தும் கூறினேன்.
உடனே அவர் மேனேஜரை அழைத்து, இவனுக்குப் பெண்கள் பக்கம் முறுக்கு விற்கும் வேலை கொடுங்கள் என்றார். தினமும் எனக்கு இரண்டு அணா சம்பளம். ஒரு தட்டு நிறைய முறுக்கை அடுக்கி என்னிடம் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு ரீலுக்கும் விளக்கை அணைத்து அணைத்துப் போடுவார்கள். விளக்கை அணைத்துவிட்டார்கள் என்றால் நான் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொள்ள வேண்டும். விளக்கை ஒளிரச் செய்யும்போது முறுக்கு..முறுக்கு... எனக் கூவிக்கொண்டே கூட்டத்திற்குள் செல்ல வேண்டும். குறுக்கே ஒரு சுவர் இருக்கும். அதன் ஒருபுறத்தில் ஆண்களும் மற்றொரு புறத்தில் பெண்களும் அமர்ந்திருப்பார்கள்.
பெண்கள் பகுதியில் முறுக்கு விற்றுக்கொண்டிருந்த என்னை, ஆண்கள் புறத்திலிருந்து ஒருவர் அழைத்தார். ‘மல்லிகை பூ வச்சுட்டு ஓரத்தில் ஒரு பொம்பள உட்கார்த்திருக்காள... நான் கொடுத்தேன்னு சொல்லி அவளுக்கு ரெண்டு அணாவுக்கு முறுக்கு கொடுத்துடு... லைட் ஆஃப் பண்ணும்போது போ... லைட் இருக்கையில் போனா அவளுக்கு அவமானமாகிவிடும்’ என்றார். பின், நான் அவரிடம் காசு வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணுக்கு முறுக்கு கொடுத்தேன். அவரும் வாங்கிக்கொண்டார். அன்றைய ஷோ முடிந்ததும் முறுக்கு விற்றதற்காக இரண்டு அணா சம்பளம் கொடுத்தார்கள். அதன் பிறகு, தினமும் அங்கு முறுக்கு விற்றேன்.
மறுநாள், வேறொருவர் என்னை அழைத்து வேறொரு பெண்ணைக் கைகாட்டி அவருக்கு முறுக்கு கொடுக்கச் சொன்னார். அங்கிருந்த ஆண்களில் சிலர், கள்ளக்காதலிக்கு முறுக்கு கொடுக்க என்னை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். அன்றொருநாள், ஒருவர் அழைத்து ‘சிவப்பு சேலை கட்டியிருக்க அந்தப் பொம்பளைக்கு முறுக்கு கொடு’ என்றார். நான் லைட் ஆஃப் செய்தவுடன் சென்று, ‘அக்கா உங்களுக்கு அண்ணே முறுக்கு கொடுக்கச் சொன்னார்’ என்றேன். ‘எவன்டா எனக்கு முறுக்கு கொடுத்தது’ என்று கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். உடனே லைட்டைப் போட்டுவிட்டார்கள். அதன் பிறகுதான் தெரிந்தது, நான் முறுக்கு கொடுத்தது அந்த ஊர் பெரிய மனுஷனின் மனைவியென்று. அவரும் சிவப்பு சேலை கட்டியிருந்ததால் ஆள் மாற்றிக் கொடுத்துவிட்டேன். ‘எவன்டா முறுக்கு கொடுக்கச் சொன்னது’ எனக் கேட்டு அங்கிருந்த ஆட்கள் என்னை அடி வெளுத்துவிட்டனர். கொடுக்கச் சொன்னவரை கூட்டத்தில் தேடினால் ஆள் இல்லை. நான் சொல்லிவிடுவேன் என்று நினைத்து பயத்தில் ஓடிவிட்டார்.
ஆண்கள் என்னைத் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறி மேனேஜர் ஆண்கள் பகுதியில் முறுக்கு விற்க என்னை மாற்றிவிட்டார். இப்படி முறுக்கு விற்றுக்கொண்டு 500 ஷோக்களுக்கும்மேல் படம் பார்த்துள்ளேன். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்படி முறுக்கு விற்றேன். ஒன்னே கால் அணா கொடுத்து படம் பார்க்க பணமில்லாத ஆட்கள், வெளியே நின்று பாடல்களையும் வசனங்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஷோ முடிந்து நான் வெளியேவரும்போது படம் எப்படி இருந்தது... கதை என்ன என்று என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்குப் படத்தின் முழு கதையையும் சொல்வேன். 8 வயதில் இப்படி கதை சொல்ல ஆரம்பித்துத்தான் கதை சொல்லும் பழக்கமும் எழுதும் பழக்கமும் எனக்கு வந்தது. நான் கூறும் கதையைக் கேட்டுவிட்டு படம் பார்த்த மாதிரியே இருக்குடா என்பார்கள் என் நண்பர்கள்.