Skip to main content

குண்டடிபட்டு சிகிச்சையில் எம்.ஜி.ஆர்... மருத்துவமனைக்கு பெரிய பண்டலுடன் வந்து நெகிழச் செய்த தேவர்

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆரை நெகிழச் செய்த சாண்டோ சின்னப்பத்தேவரின் செயல் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...   

 

எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவுக்கு இடையே இருந்த பிரச்சனை அனைவருக்கும் தெரிந்ததே. 'பெற்றால்தான் பிள்ளையா' பட நேரத்தில்தான் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எம்.ஆர்.ராதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர். ஒரு படத்தை முடிக்காமல் அடுத்த படத்தை தொடங்கமாட்டார். இதனால் 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர், எம்.ஆர்.ராதாவிடம் சென்று எம்.ஜி.ஆர். பற்றி குறை சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு கோபமான எம்.ஆர்.ராதா, நேராக வந்து எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டார். அப்போது எம்.ஆர்.ராதா குடித்திருந்தார். அவர் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சுட்டிருக்கமாட்டார்.

 

உடனே, எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும்போது வேறு நரம்பு எதையும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக சில காலம் கழித்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர். எம்.ஜி.ஆரால் பேசக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சாண்டோ சின்னப்பத்தேவர் கையில் பெரிய பண்டலுடன் மருத்துவமனைக்கு வந்தார். 

 

எடுத்துவந்த முருகன் விபூதியை எம்.ஜி.ஆர். நெற்றியில் பூசிவிட்டு, இந்தா முருகா உனக்கு அட்வான்ஸ் என்றார்.  எம்.ஜி.ஆருக்கு ஒரே குழப்பம். நாம் குணமடைவோமா என்று தெரியவில்லை, குணமடைந்தாலும் பேச்சு வருமா என்று தெரியவில்லை, இப்படி இருக்கும்போது அண்னன் வந்து அட்வான்ஸ் கொடுக்கிறாரோ என்று எம்.ஜி.ஆர். யோசித்தார். ஆனாலும், வாங்கிக்கோ முருகா என்று எம்.ஜி.ஆர். கையில் தேவர் கொடுத்துவிட்டார். இதற்கு காரணம், எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் இடையே இருந்த உயிரிலும் மேலான நட்புதான். இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

 

அந்த அட்வான்ஸ் தொகையை கையில் வாங்கியபோது எம்.ஜி.ஆர். அழுதுவிட்டாராம். ஏனென்றால், சினிமாத்துறையில் இது மாதிரி நடப்பதெல்லாம் அபூர்வம். நாடகத்தில் நடிக்கும்போது ஒருத்தரை தோளுக்கு மேல் தூக்கி நிறுத்த முயற்சித்ததில், எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. இந்த விஷயம் தெரிந்ததும், கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுங்கள் என்ற பல தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரிடம் வாங்கிவிட்டனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு மார்க்கெட்டே இல்லாமல் போனது. இதுதான் சினிமா. ஆனால், குண்டடிபட்டு பேச்சு வரவில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியான போதும்கூட அட்வான்ஸ் கொடுத்து எம்.ஜி.ஆரை தேவர் புக் செய்தார். அதன் பிறகு, மருதமலைக்கு சென்று எம்.ஜி.ஆர். குணமாக வேண்டும் என்று தேவர் வேண்டினார். தேவரின் வேண்டுதலுக்குப் பிறகு நடந்த அதிசயத்தை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்