தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் மற்றும் சாண்டோ சின்னப்பத்தேவருக்கு இடையேயான நட்பு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய வள்ளல் என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால், சாண்டோ சின்னப்பத்தேவர் எவ்வளவு தர்மம் செய்திருக்கிறார் என்று பலருக்கும் தெரியாது. அவர் கோயிலுக்கு மட்டும்தான் தர்மம் செய்தார் என்று நினைக்கிறார்கள். கோயிலுக்கு அவர் நிறைய தர்மம் பண்ணியிருக்கிறார். ஆனால், அது மட்டும் செய்யவில்லை. நானே இல்லாதவர்கள் பலருக்கு அவரிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர் ஜுப்பிட்டர்ல வேலைக்குச் சேர்ந்த போது மாதச் சம்பளம் கிடையாது. நடித்தால் மட்டும்தான் அவருக்குச் சம்பளம். ஆனால், தேவருக்கு மாதச் சம்பளம் உண்டு. எம்.ஜி.ஆருக்கு பெரிய கேரக்டர்தான் குடுப்பாங்க. தேவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி. பின்னாட்களில் தேவரும் பெரிய கேரக்டர் எல்லாம் பண்ணாரு. தேவர் பார்க்கவே நல்ல பெரிய பயில்வான் மாதிரி இருப்பார். எப்பவும் பணியனோடதான் இருப்பார். நிறைய வேஷம் கிடைக்கும்னு நல்ல உடற்பயிற்சி செய்து உடம்ப நல்லா வச்சிருந்தார். எம்.ஜி.ஆர் தேவரை அண்ணானு கூப்பிடுவார். தேவர் எம்.ஜி.ஆரை முருகானு கூப்பிடுவார்.
ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரும் அவர் அண்ணன் சக்கரபாணியும் நாடகங்களில் நடிக்க சேர்ந்தே போவார்கள். எம்.ஜி.ஆருக்கு 15 வயது இருக்கும் போது கந்தசாமி முதலியார் கம்பெனில நடிக்க வாய்ப்பு கேட்டு போனாங்க. அவர் அண்ணன் சக்கரபாணி நல்லா உடம்பு வச்சிருப்பார். ஆனால், எம்.ஜி.ஆர். ரொம்ப ஒல்லியாக இருப்பார்... மீசை கூட இருக்காது. சக்கரபாணிக்கு உடனே வாய்ப்பு கிடைச்சிருச்சு. எம்.ஜி.ஆர். ஒல்லியா இருந்ததால் ஊருக்குப் போய் நல்ல உடம்ப தேத்திட்டுவானு சொல்லிட்டாங்க. நாங்க எங்க போனாலும் சேர்ந்தே இருக்கணும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க என்று கூறி சக்கரபாணி சேர மறுத்துவிட்டார். பிறகு அந்தக் கம்பனிலேயே ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க. இருந்தாலும், ஒல்லியா இருக்கிறதா சொல்லி முதல்ல வேண்டாம்னு சொன்னது எம்.ஜி.ஆருக்கு உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்தது. நம்ம உடம்ப எப்படியாவது தேத்தணும்னு நினைக்கையிலதான் தேவரோட அறிமுகம் கிடைச்சது. நானும் உங்களோட சேர்ந்து ஜிம்முக்கு வரலாமான்னு கேட்க, தேவரும் சரி வாங்கன்னு சொல்லிட்டார். கோயம்புத்தூர்ல உள்ள மாருதி ஜிம்முலதான் இருவருக்கும் இடையேயான நட்பு வளர ஆரம்பித்து, நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள்.