பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று தனுஷ் முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையே டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற சினிமா ஸ்ட்ரைக் சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டது. இதனால் கடந்த மாதம் வெளியாக வேண்டிய புதிய படங்கள் வரிசையாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் 'காலா' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி 'காலா' வருகிற ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தணிக்கைக் குழுவில் சமீபத்தில் யு/ஏ சான்றிழை பெற்றுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது மீண்டும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஸ்ட்ரைக் காலகட்டத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு தேங்கிய படங்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில் 'காலா' வெளியிடப்பட்டால் பல படங்களுக்கும் அது பாதிப்பாக அமையுமென்பதால் ஜூன் 7 ஆம் தேதிக்கு காலா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், போராட்ட முடிவின்போது செய்தியாளர்களிடம் பேசிய போது. "இனிமேல் வெளியிடவிருக்கும் படங்கள் முன்னரே தயாரிப்பாளர் சங்கத்திடம் பதிவு செய்து ஸ்லாட் பெற்று பின் வெளியிடும் முறை பின்பற்றப்படும்" என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது வரை ஜூன் 7 ரிலீசுக்கு வேங்கய்யன் மகன் ஒத்தையிலதான் நிற்கிறார். வேறு படங்கள் மொத்தமாக வருமா என்பது சந்தேகமே...
Published on 21/04/2018 | Edited on 23/04/2018