கடந்த 1986 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும், அப்போதைய முதல்வருமான என்.டி.ராமாராவால், என்.டி.ஆர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ் என்ற பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நிலையில், ஜெகன் மோகன் தலைமையில் தற்போது அமைந்துள்ள ஆந்திர அரசு என்.டி.ஆர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ் என்ற பெயரை மாற்றி ஒய்.எஸ்.ஆர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ் என்று பெயரை சூட்டியுள்ளது. இது அங்கு பேசு பொருளாக மாறியது.
மேலும் பல்கலைக்கழகத்திற்கு தனது தந்தை பெயரை சூட்டியுள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “எனது தந்தை ஒய்.எஸ்.ஆர் 2004 - 2009 ஆம் ஆண்டு காலகட்டங்களில் மாநிலத்தின் முதல்வராக இருந்து, சுகாதாரத்துறையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து மாநிலத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளையும் நிறுவியுள்ளார். அத்துடன் எம்பிபிஎஸ் படித்திருக்கிறார். இப்படிப்பட்ட தகுதி கொண்ட என் தந்தைக்கு இந்த அங்கீகாரத்தை கொடுக்க கூடாதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பேரனும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் , “ஒய்.எஸ்.ஆர் மற்றும் என்.டி.ஆர் இருவருமே பெரும் தலைவர்கள். அதில் ஒருவரின் பெயரை எடுத்துவிட்டு மற்றொருவரின் பெயரை சூட்டுவது ஒய்.எஸ்.ஆரின் புகழை கூட்டவும் செய்யாது, அதே சமயம் என்.டி.ஆரின் புகழை மங்கவும் செய்யாது. மக்களின் இதயங்களில் இருக்கும் அவரது நினைவுகளை என்றும் யாராலும் அழிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.