திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலையின் சாதனை கருணாநிதி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது ஜெயம் ரவி பேசுகையில், "கலைஞர் ஐயா இல்லையென்றாலும் அவருடைய கருத்துக்கள் எப்போதும் இருக்கிறது. என்னிடம் கட்சி சார்பாக வந்திருக்கீங்களா என்று கேட்டார்கள்; கலை சார்பாக வந்திருக்கிறேன் என்றேன். ஆனால் கட்சி சார்பாகவும் வந்திருக்கிறேன். சினிமா என்ற கட்சி சார்பில். ஏனென்றால் ஐயாவும் முதல் கட்சி சினிமா கட்சி தான். நம்ம கட்சியும் அந்த கட்சி தான்.
ஐயாவை நேரில் பார்த்தது என்பது சந்தோஷமான விஷயம். அவர் கையில் கலைமாமணி விருது வாங்கியது அதைவிட சந்தோஷமான விஷயம். அதைவிட ஒரு பெரிய வாழ்த்து ஒரு கலைஞனுக்கு கிடைக்கவே கிடைக்காது. கலைஞர் 100 என்பது வெறும் 100 மட்டும் கிடையாது. அடுத்த 100க்கு இது முதல் நாள். அப்படியான கலைஞனை, 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவருடைய சிறப்பை சொல்லியே ஆகணும்.
நிறைய எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களை உருவாக்குவார்கள். சிலர் கதாநாயகர்களை உருவாக்குவார்கள். ஆனால் கலைஞர் மட்டும் தலைவர்களை உருவாக்கினார். அந்த எழுத்துக்களின் உயிரோட்டம் வேறு யாரிடத்திலும் பார்க்க முடியாது. அவருடைய பராசத்தி படத்தின் வசனத்தைப் பேசி நடித்தால் ஒரு சிறந்த நடிகனாகக் கருதப்படுகிறார்கள். அப்படி செய்து பார்த்ததில் நானும் ஒருத்தன்.
பொன்னியின் செல்வன் படத்தில், பழைய தமிழை பேசி நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கலைஞர் ஐயாவுடைய வசனங்களை படிச்சு உச்சரிப்பை கத்துக்கிட்டேன். அவர் மேடையில் பேசிய தமிழை பேச முயற்சித்தேன். இந்த துறையில் இருப்பதற்கு அவர் பெரிய முன்னோடி. அவருடைய சினிமா வழிகாட்டுதலில் நிறைய பேர் வந்திருக்கோம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அவருடைய பல வெற்றிகளுக்கு பின்னால் ஒரு சோறு எடுக்க வேண்டுமென்றால் அது பராசக்தி தான். அதில் வரும் வசனங்களை கேட்டால் எல்லாரும் அதை தான் உலகத்தில் சிறந்த வசனம் என்று சொல்வார்கள். ஏனென்றால் அதில் சமூகம், அரசியல், உளவியல் என எல்லாமே அடங்கியிருக்கு.
இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்ட் செட்டர், வைரல் என சொல்வார்கள். இதையெல்லாம் கலைஞர் எப்பயோ பண்ணிட்டார். அவர் எழுதிய பராசக்தி வசனம் இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கு. இன்றைய நடிகர்களும் அதை பேசுகிறார்கள். அதனால் ட்ரெண்டிங், வைரல் எல்லாம் அவர் எப்பயோ கண்டுபிடிச்சிட்டார். அதற்கு இன்றைக்கு பெயர் வைத்திருக்கிறோம் அவ்ளோதான்.
திரையுலகம், அரசியலைத் தாண்டி அவரின் மனிதம் அவருடன் நெருக்கமாகப் பேசி வருபவர்களுக்குத் தான் தெரியும். அவர் போகும் போது எதையும் எடுத்து போகவில்லை. ஆனால் எண்ணங்கள், கருத்துக்கள், சமத்துவம் போன்ற நிறைய விஷயங்கள் விட்டுட்டு போயிருக்கிறார். அதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். இருந்தாலும் அவர் ஒன்றை எடுத்துட்டு போயிருக்கிறார். அவர் எழுதிய பேனாவை, அதை வைத்து எழுதிக் கொண்டே இருப்பார்" என்றார்.