இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் , இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள படம் ‘ஹிட்லிஸ்ட்’. சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் என இருவர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் தேசிங் பெரியசாமி, பொன்ராம், மித்ரன்.ஆர்.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ் ,'சிறுத்தை'சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, இயக்குநர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி, ஆர். பார்த்திபன் கே. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, டி.சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்காவை ஜெயம் ரவி அறிமுகம் செய்து வைத்தார்.
பின்பு ஜெயம் ரவி பேசுகையில், “இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் விக்ரமின் அன்பிற்காகத்தான், இங்கே இவ்வளவு இயக்குநர்கள் வந்துள்ளார்கள். இருவருமே இந்திய சினிமாவின் சிறந்த ஆளுமைகள். அவர்களின் பெயரை காப்பாற்றி இந்திய சினிமாவில் ஒருவராக விஜய்கனிஷ்கா வருவார் என்று நான் நம்புகிறேன். நான் அறிமுகம் ஆகும்போது எப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைத்ததோ, அதேபோல உங்களுக்கும் கிடைத்துள்ளது. அதேபோல உங்களை நான் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இயக்குநர்களாக இருப்பதற்கு அவர்களையும் வாழ்த்துகிறேன். வெற்றிப்படம் என்பது இப்போதே தெரிகிறது இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
ஜீவா பேசுகையில், “கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இயக்கத்திலும் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். இது ஒரு குடும்ப விழா. நான் அறிமுகமாகும் போதும் என்னை வாழ்த்த இதேபோல அனைவரும் வந்திருந்தனர். ஆளும் என்னாலும் சிறந்த படங்களை தர முடிந்தது. இவர்களின் வாழ்த்து உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும். நீங்களும் மேன்மேலும் வளருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.