சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மே மாதம் வெளியாகுவதாக இருந்த சூரரைப்போற்று படம் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய், தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் தனக்கென மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் முக்கியமான நடிகராக இருக்கும் சூர்யாவின் திரைப்படம் இப்படி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறதா என்று பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சூர்யாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களும் நேரடி ஓடிடி ரிலீஸ் என்ற செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் சசி, யாரும் வதந்தியை நம்ப வேண்டாம். ஜகமே தந்திரம் உலகம் சரியானவுடன் ரிலீஸ் செய்யப்படும். அதுவும் ரகிட ரகிட பாடல்களுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆடுவதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.