Skip to main content

சென்னையில் உலக சினிமா விழா

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

international  cinema festival in chennai

 

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2, மற்றும் 3 ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் தேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற நிலையில் விழா ஏற்பாட்டாளர்கள் பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

உலக சினிமா விழா பற்றி பாஸ்கரன் பேசும்போது, "15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவைப் போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய அடவி என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் எனப் பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது. அதுமட்டுமின்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து சென்னை உலக சினிமா விழாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார். 

 

இந்த விழாவில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. திரைப்பட விழாவில் படங்களைக் காண வரும் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது. இந்த விழாவிற்கான அனைத்துச் செலவுகளும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் வெள்ளிமலை, இராவணக் கோட்டம் போன்ற படங்களும் ஃபெஸ்டிவல் வெர்ஷன் என்ற பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடத் தயாராக இருக்கிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்கள் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து 15 படங்களைத் தேர்வு செய்து திரையிடுகிறோம்.

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி, கதை வசனம் எழுதி  சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் பிரதானமாகத் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சி பட்டறையை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான விக்னேஷ் குமுளை, நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

 

இருவரும் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளைப் பெற்று வரும் கூழாங்கல் மற்றும் கற்பரா திரைப்படத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்கான சினிமா திரையிடும்போது மட்டும் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற திரைப்படங்களைக் காண சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறுவர் திரைப்படங்களைக் காண வரும் சிறுவர்களுக்கும் அவர்களுடன் துணையாக வரும் பெற்றோர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பாஸ்கரன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்