பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மனுத் தாக்கல் செய்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி. சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடந்த விசாரணையில், எஸ்.வி. சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஜெயவேல் தெரிவித்தார். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு செய்து எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை அளிக்கவும் ரூ.15000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அபராதத் தொகையை அதே நாளில் நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் செலுத்தினார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்து அதற்கான மனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதை ஏற்ற நீதிமன்றம் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. வழக்கை விசாரித்த அவர், வழக்கில் மறு உத்தரவு வரும்வரை எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.