கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பொழுதுபோக்கு துறைகளில் எந்தவித பணியும் தொடங்கவில்லை. இடையே ஊரடங்கு உத்தரவிலிருந்து சில நிபந்தனைகளுக்குள் உட்படுத்தப்பட்டு, சின்னத்திரை ஷூட்டிங் மற்றும் வெள்ளித்திரை இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்க அரசு உத்தரவளித்தது.
ஆனால், அதனைத் தொடர்ந்து சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகாமானதால் மீண்டும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு மார்ச் 19 முதல் 12 நாளுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஷூட்டிங்கும், இறுதிக்கட்ட பணிகளும் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எந்தவொரு பாடல் பதிவு, இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி என எதுவுமே இல்லாததால் இசையமைப்பு கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவ முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் தலா 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். இமான், அனிருத், ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் தலா 2 லட்சமும், தமன் ஒன்றரை லட்சமும், விஜய் ஆண்டனி மற்றும் ஜிப்ரான் இருவரும் தலா 50,000 ரூபாயும் வழங்கியுள்ளனர். இந்தத் தொகையை வைத்து இசையமைப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 2,000 ரூபாய் வழங்கியுள்ளது இசையமைப்பாளர்கள் சங்கம்.