Skip to main content

"ஜெயகாந்தன் கேட்ட கேள்வி பளார் பளார்னு அறைஞ்ச மாதிரி இருந்தது!" - இளையராஜா பகிர்ந்த நிகழ்வு  

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பதில்களினூடே பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அப்போது ஒரு மாணவி எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்குமிடையிலான உறவு குறித்து பகிருமாறு கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியடைந்த இளையராஜா, தான் திரையுலகத்துக்கு வருவதற்கு முன்பு ஜெயகாந்தனை சந்தித்த நிகழ்வொன்றை பகிர்ந்தார். 
 

ilaiyaraja with jayakanthan

 

 

"எங்க பாவலர் அண்ணன் ட்ரூப்ல இருந்து நானும் பாஸ்கர் அண்ணனும் வெளியே வந்து சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சி பண்ணிக்கிட்டுருந்தோம். அப்போது ஒரு நாள், நான், பாஸ்கர் அண்ணன், இயக்குனர் பாரதிராஜா மூனு பேரும் சேர்ந்து எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திக்கப் போலாம்னு கிளம்புனோம். அவரிடம் சினிமா வாய்ப்புக்கு உதவச் சொல்லி கேட்கலாம்னு திட்டம். அப்போது நுங்கம்பாக்கத்தில் அவரது வீடு. நேரா அங்க போயி நின்னோம். எங்களை முன்பே அவர் அறிவார். 'வாங்க தோழர்'னு கூப்பிட்டு, 'என்ன தோழர் விஷயம்?'னு கேட்டார். நாங்க அவரை சந்திக்கப் போனதால், 'சரி சொல்லி வைப்போமே'னு "தோழர், நாங்க அண்ணன் ட்ரூப்ல இருந்து வெளில வந்துட்டோம். சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவீங்கன்னு உங்களை நம்பித்தான் வெளிய வந்தோம்"னு சொன்னோம். அப்படி சொன்னா முக்கியத்துவம் கொடுத்து உதவுவார்னு நினைச்சோம். ஆனா அவர், நாங்க இப்படி சொன்னதும் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாகிவிட்டார். எதுவுமே பேசல. சுத்தமா அமைதியாகிட்டார். எங்களுக்கு ஒன்னுமே புரியல. 'எதுவும் தப்பா பேசிட்டோமோ'னு குழப்பத்தில் இருந்தோம். திடீர்னு சத்தமா, கோபமா, "என்னை கேட்காமல்... என் அனுமதியில்லாமல்... நீங்கள் எப்படி என்னை நம்பலாம்? எப்படி நீங்கள் என்னை நம்பி வெளியே வரலாம்?"னு அவரோட சிம்மக் குரலில் கேக்குறார். எங்களுக்கு அப்படியே காது அடைச்சிருச்சு. அவர் கேட்ட விதம் எங்கள 'பளார் பளார்'னு அறைஞ்ச மாதிரி இருந்தது. அவர் கோபமானதும் என்ன பண்றதுன்னு தெரியாம ஏதோ சொல்லிட்டு வெளியே வந்துட்டோம். வெளியே வந்து பாஸ்கரும் பாரதிராஜாவும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. "என்னயா இது, இவரெல்லாம் என்ன கம்யூனிஸ்டு? இவரை நம்பி வந்தோம்னு சொல்றோம். ஒரு ஆறுதல், நம்பிக்கை சொல்லாம, இப்படி கோபப்படுறாரு. வெளியில மட்டும் தொழிலாளி வர்க்கம், ஏகாதிபத்யம்னு பேசுறாரு?"ன்னு ரெண்டு பேரும் கிண்டல் பண்ணுனாங்க. நான் சொன்னேன், "அப்படியில்லப்பா, 'நீங்க ஏன் என்னை நம்பி வந்தீங்க? உன்னை நம்பி நீ வந்துருக்கணும்'னு சொல்றாருல? அவர்தான் ஜெயகாந்தன்” என்று சொன்னேன். அப்போதிருந்தே அவரை என் குருவாக ஏற்றேன். பின்னாடி நாங்க நண்பர்களாகிட்டோம்".
 

இவ்வாறு மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான தன் நினைவை பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜெயகாந்தன், எழுத்துலகில் அரசராகத் திகழ்ந்தவர். ஞானச்செருக்கு கொண்டவர். அவரது கோபம் அந்த வட்டாரத்தில் புகழ்பெற்றது. இளையராஜாவின் இசைஞானமும் கோபமும் அனைவரும் அறிந்ததே. இந்த இருவருக்குள் இப்படி ஒரு நட்பு இருந்ததை அறிந்த இளம் தலைமுறை மாணவிகள் மகிழ்ந்தனர். 


 

சார்ந்த செய்திகள்