விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. இந்தி பதிப்பினை வெளியிட தணிக்கை வாரிய குழு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார் விஷால். மேலும் படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், அமைச்சகத்தின் மூத்த அதிகாரியைக் கொண்டு மும்பையில் விசாரணை நடத்த அனுப்பினர். பின்பு சி.பி.ஐ. இந்த விவகாரம் தொடர்பாக இடை தரகர்கள் மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் குழு அதிகாரிகள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணையை துவங்கியது. இது தொடர்பாக விஷாலின் உதவியாளர் ஹரிகிருஷ்ணனிடம் 2 நாட்களாக மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடந்தது. மேலும் தரகர்கள் மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளது. இவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே இந்த விவாகரத்திற்கு பிறகு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங் பதிப்பிற்கு சம்பந்தப்பட்ட தணிக்கை அலுவலகத்திலேயே சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை அறிவித்தது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ், ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அற்புதமான முடிவுக்காக இந்திய அரசுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். முன்னேற்றத்திற்கான இந்த முடிவு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி பிராந்திய திரைப்படத் துறையை வலுப்படுத்தும். படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும்" என குறிப்பிட்டுள்ளது. கன்னடத்தில் முன்னணி நிறுவனமான இந்த நிறுவனம் தற்போது தமிழில் நேரடி முதல் படமாக கீர்த்தி சுரேஷை வைத்து 'ரகு தாத்தா' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறது.
Our profound appreciation to govt. of India (GoI) and CBFC for this groundbreaking decision!
Allowing certification of Hindi dubbed films in their respective regions is a remarkable leap forward. This move will undoubtedly strengthen the Regional film industry, encouraging…— Hombale Films (@hombalefilms) October 21, 2023