தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருந்து வரும் சித்தார்த் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சமூகப் பிரச்சனைகள் குறித்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வரும் சித்தார்த்., மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஆர்பிஎப்’ (CRPF) அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனத் திமிராக அதிகாரிகள் பதிலளித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
சித்தார்த்தின் இந்தப் புகார் சமுக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. சித்தார்த்துக்கு ஆதரவாக மதுரை எம்.பி வெங்கடேசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சித்தார்த் மீது மதுரை மாநகர ஆணையர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதில் நடிகர் சித்தார்த் 'சிஆர்பிஎப்’ அதிகாரிகளின் பணிகளைக் களங்கப்படுத்தும் விதமாகப் பொய்யான குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.