ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘தர்பார்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டால் ரஜினி ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். ஆனால், இப்படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. அது வில்லன் ஸ்ட்ராங்காக இல்லை என்பதுதான். இதே குறைதான் ‘பேட்ட’ படத்திலும் சொல்லப்பட்டது. வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பிரச்சனையா என்றால் அதுதான் இல்லை. இவர்கள் முன்பு நடித்த படங்களில் சிறப்பான நடிப்பைதான் கொடுத்திருக்கிறார்கள்.
‘தர்பார்’ படத்தில் வில்லனாக வரும் சுனில் ஷெட்டி, ஹரி சோப்ரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உலகளவில் செயல்படும் ட்ரக் மாஃபியா கும்பலின் தலைவன் போல பில்டப் கொடுக்கப்பட்டாலும், அது வெறும் வாய்ஸில் மட்டும்தான் இருக்கிறது. அவர் செய்யும் வேலைகள் அப்படியில்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் ரஜினியின் அடிதாங்காமல் பொசுக்கென வீழ்ந்துவிடுவார். சுனில், 90களில் பாலிவுட்டை கலக்கிய ஆக்ஷன் ஹீரோ. இப்போதுவரை சினிமாவில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், அவரை தமிழ் சினிமா ரொம்ப ஈஸியாக டீல் செய்துவிட்டது.
‘பேட்ட’ படத்திலும் இதே நிலைமைதான். அதில் வில்லனாக நடித்த நவாசுதின் சித்திக் பற்றி உலக சினிமா ரசிகர்கள் வரை அறிவர். ஆனால், பேட்ட படத்திலோ சற்று டொங்கன் போல காட்டிவிட்டார்கள். நவாசுதினின் வில்லத் தனத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் நடித்திருக்கும் ‘பிளாக் ஃப்ரைடே’, ‘கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘லயன்’, ‘சேக்ரெட் கேம்ஸ்’ உள்ளிட்ட படங்கள் அவருடைய சிறந்த நடிப்பிற்கும், வில்லத்தனத்திற்கும் சான்று. அதற்கு முன்பு ரஜினி நடித்த ‘காலா’ படத்திலும் வில்லன் ஒரு பாலிவுட் நடிகர்தான். என்னதான் மேலே சொன்னவர்களுடன் கம்பேர் செய்யும்போது இந்த கதாபாத்திரம் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் அவரையும் முழுதாக பயன்படுத்தவில்லை என்றுதான் விமர்சனம் எழுந்தது.
தமிழ் சினிமாவில் விஜய் நடித்து வந்த இன்னொரு மாஸ் படமான ‘பிகில்’ படத்திலும் வில்லனாக பாலிவுட் நடிகரான ஜாக்கி செராஃப்தான் நடித்திருந்தார். முதலில் அவர் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானபோது தளபதி ரசிகர்கள் சிலிர்த்து சில்லறையை விட்டெரிந்தார்கள். ஆரண்ய காண்டத்தில் அவர் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானார். தங்கள் தளபதியுடன் கெத்தாக நின்று விளையாடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஜட்டியுடன் உட்கார வைத்தார் அட்லி.
தளபதி ஒரு பக்கம் இப்படி என்றால் தலயும் சும்மாயில்லை. ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடிப்பதாக செய்தி வந்தது. ஆனால், படம் பார்த்தவர்களுக்கு இவர் வில்லன் தானா என சந்தேகம் வந்தது. அந்தளவிற்கு அஜித்திற்கு விஸ்வாசமாக இருந்தார். இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்களே!
நெடுங்காலமாகவே பாலிவுட் பிரபலங்கள் தமிழ் சினிமாவில் வந்து மாட்டிக் கொள்வது வழக்கம்தான். ‘ஹீரோ’ படத்தில் அஜய் தியோல், ‘அஞ்சான்’ படத்தில் மனோஜ் பாஜ்பாய், என அந்த பெரிய லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். இதில் ரஜினிக்கு ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய் குமார் நடித்த எதிர்மறையான கதாபாத்திரம், ஒரு நல்ல கதாபாத்திரமாகவே அவருக்கு அமைந்தது. என்னதான் வில்லனாக படத்தில் வந்தாலும், அவருடைய கதாபாத்திரம் அவரை ஒரு ஹீரோவாகவெ ரசிகர்களுக்கு புரொஜெக்ட் செய்தது. அந்தளவிற்கு அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த முக்கியத்துவம்தான் மற்ற பாலிவுட்டில் இருந்து வந்த நடிகர்களுக்கு மிஸ்ஸாகிறது என்றும் சொல்லலாம். ‘ஹேராம்’ படத்தில் ஷாருக் கான் கதாபாத்திரம் என்னடா இப்படி இருக்கு என அப்போது கலாய்க்கப்பட்டாலும் இப்போது அந்த கதாபாத்திரத்தை கொண்டாடுகின்றனர்.
பாலிவுட்டிலிருந்து இப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்காக கோலிவுட்டிற்கு வருவதற்கு அந்த நடிகர்களுக்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. அவர்கள் இங்கு வருவதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்களில் ஒன்று, திருப்தியான சம்பளம், மற்றொன்று, சினிமாத்துறையில் எடுக்கப்படும் பெரிய முயற்சிகளில் ஒரு அங்கமாக தாங்களும் இருக்க விரும்புவது.