
நடிகையும் பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரனாவத், ஹிமாச்சல் பிரதேஷ் மண்டி பகுதியில் நடந்த சமீபத்திய அரசியல் நிகழ்ச்சியில் தனது இல்லத்துக்கு ரூ.1 லட்சம் முன் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தார். அவர் பேசியதாவது, “இந்த மாதம் மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ. 1 லட்சம் மின் கட்டணம் வந்தது, அங்கு நான் வசிக்கவே இல்லை. அங்கு என்ன நடக்குறது என்பதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. இந்த நாட்டையும் மாநிலத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை” என்றார்.
மேலும் ஹிமாச்சல் பிரதேஷை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை ஓநாய்கள் என்றும் அவர்கள் கைகளில் இருந்து மாநிலத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார். அவர் மண்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கங்கனா ரனாவத்தின் குற்றச்சாட்டுக்கு ஹிமாச்ச பிரதேசத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் சமூக வலைதளம் வாயிலாக பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கங்கனா விளையாடுகிறார். அவர் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. ஆனால் பொது மேடையில் அரசை விமர்சிக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ரூ.90,384 மின்சார கட்டன தொகையை கங்கனா கட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.