![Handicapped liked maayon movie teaser](http://image.nakkheeran.in/cdn/farfuture/0vsvFgNM4p-kerNv0jfBclcSBZoU4HwQLuQkdDHM_n0/1638599906/sites/default/files/inline-images/maayon.jpg)
இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் 'மாயோன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/gr_p4fWW-A_UkaWe6MkohYCWS5xfvNqMxz4ynXrI65E/1638599942/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_49.jpg)
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரைப் பார்வைத் திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலிக் குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். நாம் அனைவரும் நம்முள் பல 'இயலாமை'களையும், அச்சங்களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றதாக இருக்கும். எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது " எனக் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் பிரத்யேக ஒலிக்குறிப்புடன் 'சைக்கோ' படத்தின் டீசரை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.