'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் மூலம் அடல்ட் காமெடி ஜானரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி அடுத்ததாக இணைந்துள்ள படத்திற்கு 'காதலை தேடி நித்யா-நந்தா' என்று பெயரிட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்விக்கு பிறகு ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ள இப்படத்தை விஷன் ஐ மீடியாஸ் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரித்துள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது....
"இந்த படத்தின் நாயகன் நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதைதான் 'காதலை தேடி நித்யா நந்தா'. வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். விரைவில் படத்தை பற்றி தொடர் அறிவிப்புகள் வரும். ரசிகர்களுக்கு ஒரு உத்திரவாதம், இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்" என்றார். அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.