'நேரம்', 'பிரேமம்' படத்தை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள படம் 'கோல்ட்'. இப்படத்தில் பிரித்திவிராஜ், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஜ்மல், அலெக்ஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் இன்று (01.12.2022) வெளியாகியுள்ளது. தமிழ் மொழியில் நாளை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தமிழில் வெளியிட எஸ்.எஸ்.ஐ பட தயாரிப்பு நிறுவனம் உரிமம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'மாநாடு' படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் 'கோல்ட்' படத்தை வெளியிட கூடாது எனத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் அவர் குறிப்பிட்டிருப்பது, "மாநாடு படத்தை தமிழகத்தில் வெளியிட எஸ்.எஸ்.ஐ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் அவர் தரவேண்டிய நிலையில், 'கோல்ட்' படத்தின் தமிழ் டப்பிங் வெளியீட்டு உரிமம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ பட தயாரிப்பு நிறுவனம், 'மாநாடு' பட பாக்கியை தராமல் 'கோல்ட்' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.எஸ்.ஐ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், நிலுவையில் உள்ள தொகையை 90 நாட்களில் தவணை முறையில் கொடுப்பதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.