வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி மற்றும் தற்போது வெளியான லெஜெண்ட் என பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் சத்யா என் ஜெ. அவரை நமது நக்கீரன் ஸ்டூடியோ யூ ட்யூப் பக்கத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் எடுத்த போட்டோஷூட் பற்றி பகிர்ந்தவை..
"முதலில் நான் நடத்திய போட்டோஷூட் இளையராஜா சாரை வைத்து; அவரை பார்க்க செல்வதற்கு முன் எல்லோரும் அதிகமாக பயமுறுத்தினர். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் அவர் இல்லை. அவர் அதற்கு அப்படியே நேர்மாறாக இருந்தார். போட்டோஷூட் முடிந்ததும் என்னை மிகவும் வாழ்த்தினார். நான் அந்த போட்டோஷூட் எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பொழுது பார்த்தாலும் சரியான ஒன்றை மிக சரியாக செய்துவிட்டோம் என மிகத் திருப்தியாக உள்ளது. அவருக்குத் தெரிந்த ஒருவர் அவரைப் பார்த்து நன்றாக உள்ளது இதுவரை உங்களை இப்படி கண்டதில்லை என கூறியதும் "என் கிட்ட சொல்லாதீங்க அதோ அந்த பையன் தான் அவனுக்கு சொல்லுங்க" என என்னைக் கைகாட்டினார்.
பிரசாத் ஸ்டூடியோவில் அவர் சொன்னது இன்றும் நியாபகம் உள்ளது. அடுத்தது தொல். திருமாவளவன். அவரது கட்சியினரே எங்களை அழைத்தனர். அவர்களது திட்டம் இதுவரை கட்சித்தலைவர்கள் கொடுக்கும் போஸ் எப்படி இருக்குமோ அப்படி வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால் நாங்கள் எடுத்த புகைப்படங்கள் அவர்களுக்கு பிடித்தது. அப்புகைப்படங்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் பிஜேபி என இரண்டு கட்சிகளிடம் இருந்தும் போட்டோஷூட்டுக்கான அழைப்பு வந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அது அமையவில்லை.
அடுத்தது நாங்கள் போட்டோஷூட் நடத்த ஆசைப்பட்ட மனிதர் நாசர் சார். முதலில் அவருக்கு இதில் விருப்பமே இருக்கவில்லை. பிறகு நான் மனோபாலா சாரிடம் வேண்டிக்கொண்டதால் அவர் நாசர் சாரிடம் கேட்டதன் பேரில் சம்மதித்தார். இதை சொல்லியாக வேண்டும் நாங்கள் நடத்திய போட்டோஷூட்களில் அவராகவே போஸ் கொடுத்தது நாசர் சார் மட்டுமே. எந்த ஒரு காட்சிக்கும் நாங்கள் சொல்லித்தரவில்லை. செந்தில் சாரை வீடியோ ஷூட்டுக்காக காஸ்ட்யூம் செய்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. என் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு தான் அவருக்கு போனில் அழைத்து சொன்னேன். நேரில் அழைக்கவில்லை எனினும் பெருந்தன்மையாக திருமணத்திற்கு வந்து பரிசு கொடுத்து வாழ்த்தினார்.
விவேக் சாருடன் நான் போட்டோஷூட் நடத்திய பின் அவரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவருடைய அடுத்தடுத்த திட்டங்களை கூறினார். அதில் இயக்குநர் ஆவதும் ஒன்று. அந்த போட்டோஷூட் பார்த்து அதே கெட்டப்பில் ஹீரோவாக ஒரு படம் நடிக்க வேண்டும் என பிரபல ஒளிப்பதிவாளர் அவரிடம் கேட்டார். அதை எல்லாம் நிறைவேற்றாமல் அவர் சென்றது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மன்சூர் அலிகான் உடன் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரின் இயல்பே தன் முடியை களைந்துவிட்டுக் கொள்வதுதான்.ஆனால் எங்களுக்கு முறையாக வாரிய முடியலங்காரம் தேவைப்பட்டதால் அதற்கு மட்டும் சிறிது கஷ்டப்பட்டோம். சிகையை வடிவமைத்ததும் தன்னிச்சையாகவே களைத்து விட்டுக்கொள்வது அவரின் வாடிக்கையாக இருந்ததால் எங்கள் சிகையாலங்கார வடிவமைப்பாளர் அவரின் மேல் கோபப்பட்டார். பின் அவருக்கு எடுத்துச் சொல்லி அவரின் இயல்பே அது தான் என புரியவைத்து பின்னர் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் நம்மிடம் இருந்திருக்கலாம் என்ற ஒன்றை தவிர்த்து வேறு எந்த வருத்தமும் இல்லை. அடுத்தக்கட்டமாக முற்றிலும் நடிகைகளை வைத்து போட்டோஷூட் நடத்த திட்டமிட்டுள்ளோம். சில வேலைகள் இருப்பதால் அதை முடித்து விட்டு தொடங்க தொடங்கலாம் என நினைக்கின்றோம்"