Skip to main content

'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் - ஜெர்மனிய தூதரக அதிகாரிகளுக்கு பிரதமர் பாராட்டு

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

German Ambassador to India officer Philipp Ackermann and his team dance for nattu nattu song

 

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமீர் கானின் 'தங்கல்', இரண்டாவது இடத்தில் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி 2' படங்கள் உள்ளன. 

 

இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 'நாட்டு நாட்டு' பாடல் பலரது கவனத்தை ஈர்த்து திரைத்துறையில் உயரிய விருதுகளாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

 

இதனால் உலக அளவில் கவனம் பெற்ற இப்பாடலை பலரும் நடனமாடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் பிரபு தேவா அவரது நடன குழுவுடன் நடனமாடிய வீடியோ வைரலானது. மேலும் இப்பாடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெஸ்லா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டு 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிபரப்பு செய்தது. 

 

இந்த நிலையில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் அவரது சமூக வலைதள பக்கத்தில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் டெல்லியில் சாந்தினி சவுக் என்கிற பகுதியில் அவரும் ஜெர்மனி நாட்டின் மற்ற தூதரக ஊழியர்களும் ஒன்றாக இணைந்து 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ வைரலாக அதற்கு பிரதமர் மோடி, ஜெர்மனி நாட்டினர் சிறப்பாக நடனம் ஆடியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்