சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கௌதம் மேனன், “என்னோட மற்ற படங்களைவிட 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு நிறைய நல்ல விமர்சனங்கள் வந்திருக்கு. அது நிறைய பேர்கிட்ட படத்தை கொண்டு போய் சேர்த்திருக்கிறது. அதனால ரொம்ப நன்றி. திரைப்படங்களுக்கான விமர்சனம் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு உதவுகிறது. விமர்சனங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.
முதலில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்ற படம்தான் சிம்பு நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாவதாக இருந்தது. அதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், 30 நாட்கள் கழித்து மீண்டும் சிம்புகிட்ட போய், 'நதிகளிலே நீராடும் சூரியன்' படம் நாம பண்ணல, அதற்கு பதில் ஜெயமோகன் சார் ஒரு கதை எழுதிக் கொடுத்திருக்காரு. அதைத்தான் நாம பண்ண போறோம்னு சொன்னேன். உடனே சிம்புவும் ஒத்துக்கிட்டாரு. அதுக்கு சிம்புவுக்கு நிறைய நன்றி. சிம்புவை போல் தான் ஏ.ஆர் ரஹ்மான் சாரும். நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் 3 பாடல்களை ரெக்கார்ட் செய்து முடித்திருந்தோம். அவரிடம் “நாம இந்த கதையை பண்ணல சார், வேறு ஒரு புதிய கதையை தான் பண்ணப்போறோம், நீங்க பண்ண 3 பாடல், வரிகளை மட்டும் மாற்றி, இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்றேன். ஆனால் அவர், வேண்டாம் புது கதைக்கு புதுசாவே ரெடி பண்ணலாம்னு சொல்லி, புதுசா ரெடி பண்ணி கொடுத்ததுதான் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் பாடல்” எனத் தெரிவித்தார்.