மலையாளப் படம் 'ஜல்லிக்கட்டு'க்குப் பிறகு எந்தப் படத்துக்குப் போகலாம் என்று பார்த்திருந்து சில காரணங்களால் நிவின் பாலி நடித்த மலையாளப் படமான 'மூத்தோன்' படத்தையும் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'பாலா' படத்தையும் தவறவிட்டேன். சரி, பொறுத்தது பொறுத்தாச்சு தலைவன் கிறிஸ்டியன் பேல் நடிச்ச ‘ஃபோர்ட் v ஃபெராரி’ படம் வந்திருக்கிறது. இந்த முறை மிஸ்ஸாகிடாது என்று செம எதிர்பார்ப்போடு சென்று பார்த்தேன். சற்றும் ஏமாற்றவில்லை ‘ஃபோர்ட் v ஃபெராரி’.
ஃபோர்ட் v ஃபெராரி படத்திற்கான எதிர்பார்ப்பை முதலில் தூண்டியவர்கள் கிறிஸ்டியன் பேல் மற்றும் மேட் டாமன் இருவரும்தான். கிறிஸ்டியன் பேல், ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னுடைய உடம்பை வருத்திக்கொண்டு, படத்தின் கதாபாத்திரமாக மாறுவதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் மெனக்கெடலுக்காகவே அவர் நடிக்கும் படங்களை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், போன படத்தில் அவருடைய தோற்றத்தை பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் அவர் எந்தத் தோற்றத்தில் இருக்கிறார் என்பதை பாருங்கள், நான் சொல்வது புரியும். அவரை தொடர்ந்து போர்னே சீரிஸ் படங்கள் இந்தியாவில் ஃபேமஸ் என்பதால் மேட் டாமனுக்கு நம்மூரிலும் ரசிகர்கள் உண்டு.
இவர்கள் இருவர் மட்டுமல்லாமல், இந்தப் படத்தின் கதைக்களமும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தது. ஆமா, அப்படி என்ன கதைக்களம் என கேட்கிறீர்களா? இந்தப் படத்தின் டைட்டிலிலேயே இருப்பதுதான். ஃபெராரி கம்பெனியின் நிதி நிலை மோசமாக இருக்கும்போது அந்த கம்பெனியையும், ரேஸிங் டீமையும் வாங்கிக்கொள்ள விரும்புவதாக ஃபோர்ட் நிறுவனம் ஃபெராரி நிறுவனத்திடம் தெரிவிக்கும். டீல் பேசுவதற்காக ஃபெராரி நிறுவனம், ஃபோர்ட் நிறுவனத்தை ஒரு சந்திப்பிற்கு அழைக்கும். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்க, கடைசி நேரத்தில் ஃபெராரி கம்பெனியின் தலைவர் என்சோ ஃபெராரி, ஃபோர்ட் நிறுவனத்தையும் ஃபோர்டின் அப்போதைய சேர்மேன் ஹென்ரி போர்ட்-2 வையும் அவமதித்துவிட்டு, தனது நிறுவனத்தை ஃபியட் நிறுவனத்திற்கு ஒரு நல்ல விலைக்கு விற்றுவிடுவார். அப்போதுதான், இவ்வளவு நேரம் தங்களுடன் ஃபெராரி நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை, ஃபியட் நிறுவனத்திடம் விலையை ஏற்றுவதற்கான ஒரு தந்திரம் என ஃபோர்ட் நிறுவனத்திற்குப் புரியும்.
உடனடியாக ஃபோர்ட் நிறுவனத்தின் தலைவர் ஹென்ரி ஃபோர்ட் 2, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ரேஸிங்கில் உன்னை தோற்கடித்தே தீருவேன்' என அண்ணாமலை பட ரஜினி ஸ்டைலில் சபதம் எடுக்கிறார். ரேஸிங்கில் கெத்தாக இருந்த ஃபெராரி கம்பெனியை எப்படி ரேஸிங்குக்குள் புதிதாக வந்த ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தோற்கடித்தது என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். இது ஒரு உண்மை சம்பவம். 1966ஆம் ஆண்டு லி மான்ஸ் 24 மணிநேர ரேஸிங்... மோட்டார் ரேஸிங் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த ரேஸிங், குறிப்பாக அந்த வருட டோர்னமெண்ட் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். ரேஸிங்கில் ஃபெராரி என்னும் டீம் தன்னுடைய ஆறாவது தொடர் வெற்றியை பதிவு செய்யும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கையில், புதிதாக வந்த ஃபோர்ட் நிறுவனத்தின் கீழ், ரேஸிங்கில் கலந்துகொண்ட மூன்று கார்களும், முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினார்கள். அதுவும் ஒரு சேர ரேஸிங் எல்லைக்கோட்டினை தொடும் வரலாற்றுப் புகைப்படமும் அந்த ரேஸிங்கில் கிடைத்தது. இப்படி உண்மை சம்பவங்களை உள்ளடக்கியிருந்தாலும் தேவையான சம்பவங்களை மட்டும் படத்தில் சேர்த்து சினிமாவுக்கான சுவாரஸ்யத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் மேங் கோல்ட்.
1966 லி மான்ஸ் ரேஸிங்கில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை பிடித்த டீமின் கன்ஸ்ட்ரக்டர் மற்றும் ரேஸசரை மையமாக வைத்துதான் படத்தின் கதை சொல்லப்படுகிறது. மேட் டாமன், 'கோரல் செல்பி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 2ஆம் உலகப்போரில் பணிபுரிந்த ஆர்மி மேன், பின்னர் ரேஸர், இறுதியாக ரேஸிங் கார் டிசைன் செய்யும் கன்ஸ்ட்ரக்டர், இப்படி பல வேலைகள் புரிந்தவராக வரும் மேட் டாமன் தனக்குக் கொடுத்த பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் டிசைன் செய்யும் காரை, ஓட்டத் தகுதியானவர் என்று தனது கோபக்கார நண்பரான கென் மைல்ஸை தேர்ந்தெடுப்பார். கிறிஸ்டியன் பேல்தான், 'கென் மைல்ஸ்' கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ஒரு தந்தையாக, முன்னாள் ஆர்மி மேனாக, கஷ்டங்கள் இருந்தாலும் குடும்பத்தில் கோபத்தை காட்டாத, ஆனால் வெளியுலகில் பார்க்கும் அனைவரிடமும் முரடு பிடிக்கும் குணம் கொண்டவராக, 'இதெல்லாம் எனக்கு ஜுஜுபி' என்பதுபோல அசால்ட்டாக நடித்திருக்கிறார் பேல். இவர்கள் இருவரும் படம் நெடுக வர, மொத்தமாகப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் 10 பேர்தான் வருவார்கள். மற்றவர்கள் எல்லாம் அட்மாஸ்பியர் கணக்குதான்.
உலகின் இரண்டு பெரிய கார் நிறுவனங்கள் பற்றி இவ்வளவு அப்பட்டமாக எடுத்ததற்கே இந்தப் படத்திற்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதற்காக, கதைக்களம் நன்கு வலுவாக இருந்தால் மட்டும் போதுமா? எந்தக் கதாபாத்திரத்தையும் திறம்பட நடிப்பவர்கள் படத்தில் நடித்தால் மட்டும் படம் நன்றாக இருந்துவிடுமா? திரைப்படத்தை முதலில் சுவாரஸ்யப்படுத்துவது என்பது அதன் எழுத்துதான். அதில் இந்தப் படம் பெரிதாக மெனக்கெடல் செய்திருக்கிறது. 'லோகன்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் மாங்கோல்ட், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதையை இவருடன் சேர்ந்து ஜெஸ் பட்டர்வொர்த், ஜான் - ஹென்ரி பட்டர்வொர்த், ஜேசன் கெல்லர் எழுதியுள்ளனர். இந்தப் படம் ஒரு ரேஸிங் படமாக மட்டுமல்லாமல், கார்ப்பரேட் அரசியல், குடும்ப செண்டிமெண்ட் என்று பல தளங்களில் பேசியிருக்கிறது. பொதுவாகவே ரேஸிங் படங்களில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் ரேஸிங் என்பது ஒரு சின்ன பகுதியாகத்தான் வருகிறது. அந்த ரேஸிங் காட்சிகள் வரும்போது விறுவிறுப்பாகக் காட்டுவதற்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை என்று மூன்றுமே கைக்கோர்த்து வெற்றி பெற்றிருக்கின்றன. ரேஸிங் காட்சிகள் இல்லாத மற்ற நேரங்களில், மிகவும் பொறுமையாக கதையை நகர்த்தியுள்ளனர். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இயல்பான நகைச்சுவை நம்மை புன்னகைக்க வைக்கிறது.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தெரிவது ரெவன்யூ என்னும் பணமும் பிராண்டிங் என்னும் பேரும் புகழும்தான். ஆனால், ரேஸிங் போன்று ஏதாவது ஒரு விஷயத்தை உயிராக நினைப்பவர்களுக்கு அப்படியில்ல என்பதை உணர்த்துகிறார்கள். ரேஸை பற்றித் தெரியாதவர்களுக்கும், ரேஸ் பிடிக்காதவர்களுக்கும் இந்தப் படத்தை பார்த்தால் புரியும், பிடிக்கும். அத்தனை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. மெலோ டிராமாபோல் இந்தப் படம் அணுகப்பட்டிருப்பதால் சிலருக்கு நீளம் அயர்ச்சியை தரலாம்.
பிடோன் பாபமைக்கேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேஸிங் காட்சிகளில் வேகமாக நகரும் இவருடைய கேமரா யுக்திகள், படம் பார்க்கும்போது ஒரு படபடப்பை கொடுத்தது உண்மை. ரேஸிங் படம் என்றாலே வரும் டெம்பிளேட் ஷாட்களை தவிர்த்து நிறைய புதிய ஷாட்களை படத்தில் காட்ட முயற்சி செய்திருக்கிறார். மைக்கேல் மெக்கஸ்கர், படத்தொகுப்பு செய்துள்ளார். தேவையான செண்டிமெண்ட் சீன்களில் நிதானத்தையும், ரேஸிங் சீனில் வேகத்தையும் கையாண்டிருக்கிறார். படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப தேவையான படத்தொகுப்பை அவர் கொடுத்ததால்தான் இந்தப் படத்தை தற்போது ஒரு மாஸ்டர் பீஸாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பின்னணி இசையை மார்க்கோ பெல்த்ராமி வடிவமைத்திருக்கிறார். அவருடைய பின்னணி இசையும், சவுண்ட் எஃபெக்ட்ஸும் சேர்ந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
மொத்தத்தில், மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்துக்காகப் பசியுடன் காத்திருப்பவர்களுக்கு ஃபோர்ட் vs ஃபெராரி ஒரு விருந்து படைத்திருக்கிறது.
முந்தைய படம்: கேரளாவில் இருந்து ஒரு ஜல்லிக்கட்டு! - மனிதன் மிருகமாகும் தருணம்... பக்கத்து தியேட்டர் #3
அடுத்த படம்: கேங்ஸ்டர் படங்களின் காட்ஃபாதர் மார்டின் ஸ்கார்சஸியின் கனவுப்படம் எப்படி இருக்கு? - பக்கத்து தியேட்டர் #5