![vijay shooting](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z9QM11e4S3780GCI3DqJ4iQ9rX63c2KXz2oTGvHkUgc/1533347650/sites/default/files/inline-images/fight.jpg)
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இதனால் தற்போது படப்பிடிப்பில் இருந்த முன்னணி நடிகர்களின் படங்களோடு சேர்த்து 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரை உலகை நம்பி வேலை செய்த 5 லட்சம் சினிமா தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு தடைகளை மீறி சென்னையில் நடைபெற்றது. மேலும் நாடோடிகள் 2 உள்ளிட்ட இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெற்றன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இடையே அவசர பேச்சு வார்த்தை சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும், இயக்குனர்கள் சேரன், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது விஷாலுக்கும், இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்டிரைக் நடந்து வரும் நிலையில், விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்ததால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் திரைப்பட உலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.