![dwdw](http://image.nakkheeran.in/cdn/farfuture/XW6Rgz8EkcNguc9kzC5GY-IScozJg1I8uRjDHTjV2oo/1589009178/sites/default/files/inline-images/Untitled-1_143.jpg)
கரோனாவால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் பல நிபந்தனைகளை வைத்து தனி கடைகளையும், மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சினிமா துறையிலுள்ள தயாரிப்பு சங்கம் சார்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்று ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர்களால் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதையடுத்து திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளைத் (Post Production Work) தொடங்க வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஃபெப்சி சார்பாகத் தொழிலாளர்களுக்கு சில வரைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தது அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்....
''மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் நன்றி.
கரோனா வைரஸ் பாதிப்பால் வேலை முடக்கம் (லாக் டவுன்) செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் சற்று மூச்சு விடும் படியான ஒரு தளர்வை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்குத் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
பெரியதிரை மற்றும் சின்னத்திரைக்கான Post Production மற்றும் Pre - Production பணிகளும், சின்னத்திரைக்கான படப்பிடிப்புகளும் வேலை முடக்கத்திலிருந்து தளர்வு கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தோம். மாண்புமிகு செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களிடமும் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தோம். எங்களுடைய வேண்டுகோளைக் கனிவுடன் பரிசீலித்து தற்போது உள்ள சூழ்நிலையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரைப்படங்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
தயாரிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய (Post Production) பணிகளை மட்டும் 11.5.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்.
1. படத்தொகுப்பு (Editing) அதிகபட்சம் 5 பேர்
2. குரல் பதிவு (Dubbing) அதிகபட்சம் 5 பேர்
3. கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ் (VFX/CGI) 10 முதல் 15 பேர்
4. DI எனப்படும் நிற கிரேடிங் அதிகபட்சம் 5 பேர்
5. பின்னணி இசை (Re - Recording) அதிகபட்சம் 5 பேர்
6. ஒலிக்கலவை (Sound Design / Mixing) அதிகபட்சம் 5 பேர்
எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளைப் பெற்றுத் தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை உபயோகித்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் அரசு விதித்துள்ள மேற்கண்ட நிபந்தனைகளை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் முகக் கவசம், கையுறை பணிபுரியும் இடங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல். தெரியாத நபர்களை அனுமதிக்காது இருத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு தயாரிப்பாளர்களையும் தொழிலாளர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். யாராவது ஒருவர் தவறு செய்து கரோனா தொற்று ஏற்படும் அபாயம் அமைந்தால் இந்த அனுமதி ரத்து செய்யக் கூடிய சூழல் அமையும் என்பதை அனைவரும் நன்கு உணர்ந்து தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளைக் கண்டிப்பாக நிறைவேற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்த் திரைப்படத் துறைக்கும் சின்னத்திரைக்கும் அனுமதி வழங்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கும், செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி''
எனக் குறிப்பிட்டுள்ளனர்.