நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் நாம், “உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் சமூக அக்கறை உள்ள படங்கள் எடுக்க காரணம் என்னவாக இருந்தது” போன்ற கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...
என்னதான் அப்படி இப்படின்னு போனாலும் சண்டை சச்சரவு ஆனாலும் குடும்ப உறவுதான் முக்கியம். பணமா? பாசமா? என்று பார்த்தால் பாசம்தான் முக்கியம். பணம் பெரிசில்லை வாழ்க்கையில். உறவுகளின் முக்கியத்துவம் இப்பெல்லாம் இல்லாமல் போய்விட்டது. இப்பெல்லாம் உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. கணவன் மனைவிதான் எல்லாமே என்றாகிவிட்டது. அதிகபட்சம் போனால் கூட குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான் என்று ஆகிவிட்டது.
ஸ்ரீதர், கே.சங்கர், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உணர்வுக்கும், உறவுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தந்து படமெடுத்த சமயத்தில், நான் சினிமாவில் நுழைந்தபோது சமூக அக்கறையை மையமிட்டு படங்கள் எடுத்தேன். அதுவே எனது பாணியும் ஆகிப் போனது.
சட்டம் எல்லாருக்குமே சமமாக இருக்கிறது. ஆனால் வேறுபாடு ஏன் ஏற்படுகிறது என்பதை மையமிட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அது எனக்குத் தனியான அடையாளத்தை தந்தது. சட்டம் சந்திரசேகர் என்பதுதான் என் பெயராகவே இருந்தது.