சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசியிருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பாக படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இரா.சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது படம் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே படத்தின் தலைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு பெயர் இங்க மிகப்பெரிய அரசியலாக பார்க்கப்படுகிறது. அம்பேத்குமார் என்ற பெயரை அவர்கள் சொல்ல விரும்பவில்லை. அதற்காக அவர்கள் வைக்கப்பட்ட பெயர்தான் கூழ் பானை. ஒரு பட்ட பெயர் கூட வைப்பேன். ஆனால் உன் பெயரை சொல்லி கூப்பிடமாட்டேன் என்ற சூழல். அவன் பெயரை சொல்லி கூப்பிட்டால் அவனே திரும்பி பார்க்க மாட்டான், அந்தளவிற்கு அந்த பெயரை மறக்கடித்து விடுவார்கள். கிராமத்தில் நிறைய சாப்பிட்டுவிட்டு சுத்துபவர்களை கூழ் பானை என சொல்வார்கள். அவர்கள் வைக்கும் பட்ட பெயருக்கு பின்னால் வெறும் பரிகாசம் மட்டும் கிடையாது. வஞ்சகமான விஷயமும் இருக்கும். அதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருந்தது.
எப்போதுமே ஒரு ஹீரோவின் கதாபாத்திர பெயரை தலைப்பாக வைப்பது வழக்கம். நான் ஆரம்பத்திலே நந்தன் என்ற தலைப்பை வைத்து பண்ணுவோம் என்று ஆசைப்பட்டேன். தலைப்பை வைத்து இது உண்மை கதையா, பொய் கதையா, புராண கதையா, இதிகாச கதையா, கட்டவிழ்கப்பட்ட கதையா... இப்படி எதுவா வேணாலும் இருக்கட்டும். எட்டாம் நூற்றாண்டில் இருந்து ஒரு கதை துறத்திக்கிட்டே இருக்கு. அந்த கதையில் அவனுக்கு நடந்த அநீதி, இன்றைக்கு நினைத்தாலும் நம்மள சாகடிக்குது. இப்படி இருக்கும்போது நந்தன் தலைப்பை வைக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
இந்த தலைப்பை என்னிடம் வைக்கவேண்டாம் என சொன்னவர்கள் பலர் இருக்கிறார்கள். சொல்லப்போனால் நந்தன் என தலைப்பு வைத்தால் இந்தப்படம் வராது என்று சொன்னவங்க அதிகம். குறிப்பாக பா.ஜ.க.-வில் இருக்கும் புரட்சி கவிதாசன், எனக்கு ஃபோன் பண்ணி, ‘நந்தன் தலைப்பு வைத்திருப்பது எனக்கு சந்தோஷம் சார். ஆனா... நான் உங்க மேல உள்ள அக்கறையில சொல்றேன் தயவு செஞ்சி அந்த தலைப்பை வைக்காதீங்க. எங்க சமூகத்து ஆளுங்க கூட நந்தன் என வைக்கமாட்டாங்க. நந்தகோபால், நந்தகுமார் என நந்தன் பெயரை மறைச்சிதான் வைப்பாங்க. அப்படி சாபம் வாங்கின பெயர்தான் அந்த நந்தன்’ என்றார். அதன் பிறகு தான் படத்திற்கு நந்தன் என தலைப்பு வைக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தேன்” என்றார்.