
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர், படம் குறித்தும் படத்தில் நடித்தது குறித்தும் பகிர்ந்திருந்தனர். மேலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறினர். அந்த வகையில் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பணியாற்றிய ஒவ்வொருக்கும் நன்றி கூறினார். அப்போது இறுதியில் அவரது காதலிக்கு மேரேஜ் ஃப்ரொபோசல் செய்தார்.
மேடைக்கு கீழிருந்த அவரது காதலியை பார்த்து பேசிய இயக்குநர், “கடைசியா ஒருத்தவங்களுக்கு நன்றி சொல்லணும். ஸ்கூல் படிக்கும்போதே உன்ன எனக்கு 6-வதுல இருந்து தெரியும். 10-வதுல இருந்து நெருக்கமா இருக்கோம். இந்த இடத்துல உங்கிட்ட ஒன்னு கேட்கணும். வர அக்டோபர் மாசம் 31ஆம் தேதி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா. ஐ லவ் யூ. நிறைய நேரம் நான் சோகமாக இருக்கும் போது எனக்கு சப்போர்டா இருந்துருக்காங்க. நான் இன்னைக்கு ஒரு சிறந்த மனுஷனா இங்க நிக்குறேன்னா அதுக்கு எங்க அம்மாவுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கோ அதே அளவு அகிலாவுக்கும் இருக்கு” என்றார். உடனே அகிலா கண்கலங்கினார். இந்த சம்பவம் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமாக அமைந்தது.